ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா?- பொதுமக்கள் கருத்து


ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா?- பொதுமக்கள் கருத்து

ஈரோடு

'எத்தனை நாளா செல்கிறேன், கடைசி தேதி வரைக்கும் இருக்காதீங்கனு, ரீடிங் எடுத்த உடனேயே போய் பணத்தை கட்டுங்க, கட்டுங்கன்னு சொன்னா கேட்டாத்தானே!'

'நம்ம வீட்டுக்கு கரண்ட் பில் கட்ட இன்றைக்குத்தான் கடைசி நாளு, சாயந்திரத்துக்கு உள்ள பணத்தை கட்டலைனா, பியூசை புடுங்கிட்டு போய்விடுவாங்க, பிறகு இருட்டுலதான் கிடக்கணும். புரியாத மனுஷனா இருக்கிறாரே!'

இப்படி பல இல்லங்களில் இல்லத்தரசிகள் கணவன்மார்களை கடிந்துகொள்வதைக் கேட்டு இருக்க முடியும்.

முன்பு எல்லாம் கரண்ட் பில் கட்டுவதாக இருந்தால் மின்சார வாரிய அலுவலகங்களில் உள்ள கவுண்ட்டர்களில் போய்த்தான் பணம் கட்ட வேண்டும். ஆன்லைன் முறை வந்த பிறகு அதிக மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வசதி படைத்தவர்கள் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் பில் வந்தால் ஆன்லைனில் செலுத்த வாரியம் அறிவுறுத்தியது. அதன்படி தொழிற்சாலைகள் மற்றும் வசதி படைத்தவர்கள் அதைப் பின்பற்றி வந்தனர்.

இதில் படித்த சிலர் எவ்வளவு ரூபாய் கரண்ட் பில் வந்தாலும் கவுண்ட்டர்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தப்படி ஆன்லைனிலேயே பணத்தைக் கட்டி வந்தனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் கரண்ட் பில் கட்டுபவர்கள் ஆன்லைனில்தான் கட்ட வேண்டும் என்று வாரியம் அறிவுறுத்தியது. இதனையும் பலர் பின்பற்றி வந்தனர்.

இந்தநிலையில் தற்போது ரூ.1,000 பில் வந்தாலே ஆன்லைனில்தான் கட்டவேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.

இதுபற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

மின் அளவீடு

ஈரோடு அருள்வேலவன் நகரை சேர்ந்த இல்லத்தரசி எம்.தேவி:-

நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து மின்சார கட்டணம் கட்டுவது சிரமமாக இருந்தது. தற்போது ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் வழிமுறை எளிமையாக உள்ளது. இனி வீட்டில் இருந்தபடியே பணத்தை செலுத்திவிடலாம். ஆனால் வங்கி மூலம் மின்சார வாரிய அலுவலகத்திற்கு பணம் செலுத்தும்போது அதற்கு வங்கி சார்பில் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஒரு சில வங்கிகளை தவிர பெரும்பாலான வங்கிகளில் மின் கட்டணம் கட்டும்போது பணம் பிடித்தம் செய்கின்றனர்.

எனவே மின் கட்டணம் கட்டும்போது வங்கிகளில் பணம் பிடித்தம் செய்யாமல் இருக்க மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 2 மாதங்களுக்கு ஒருமுறை வீடுகளில் மின் அளவீடு எடுக்கப்படுகிறது. அப்படி எடுத்தால் எங்கள் வீட்டுக்கு 500 யூனிட்டுக்கு குறைவாக வரும். ஆனால் சில நேரங்களில் 2 மாதம் முடிந்து 2 அல்லது 3 நாட்களுக்கு பிறகு மின் அளவீடு எடுக்கிறார்கள். அப்போது 500 யூனிட்டுக்கு மேலாக மின்சாரம் பயன்படுத்தும்போது அதற்கு கூடுதலாக ரூ.800 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே 2 மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் மின் அளவீடு எடுக்க வேண்டும்.

சர்வர் பிரச்சினை காரணமாக காலதாமதம் ஏற்பட்டால் அதற்காக தேவையில்லாமல் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டியதில்லை. ஊழியர்களுக்கும் பொதுமக்கள் கட்டிய பணத்தை வங்கியில் செலுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளும் தவிர்க்கப்படும். தற்போது சாதாரண தள்ளுவண்டி இட்லி கடையில் இருப்பது போன்ற 'பேடிஎம்' போன்ற வசதிகள் இன்னும் வாரியத்திற்குள் வரவில்லை. இவை இருந்தால் நன்றாக இருக்கும்.

படிக்காதவர்களுக்கு சிரமம்

கருங்கல்பாளையம் வீரப்ப வீதியை சேர்ந்த மக்கள் சேவை மையத்தில் பணிபுரியும் எம்.செந்தில்குமார்:-

மின்சார கட்டணம் ரூ.1,000-க்கு மேல் வந்தால் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது படித்தவர்களுக்கு எளிதான முறையாகும். படிக்காதவர்களுக்கு சிரமம் தான். ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் எப்போது வேண்டும் என்றாலும் மின் கட்டணத்தை செலுத்திவிடுவார்கள். ஆனால் அதுபோன்ற வசதி இல்லாதவர்கள் மின் கட்டணம் கட்ட சிரமப்படுவார்கள்.

குறிப்பாக முதியவர்கள், ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் மின் கட்டணம் கட்ட ஏதோ ஒரு மக்கள் சேவை மையத்தையோ அல்லது இ-சேவை மையத்தையோ அணுக வேண்டும். அப்படி செல்லும்போது ரூ.100-க்கு ரூ.5 கூடுதலாக செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. கையில் பணம் இருந்தால் அதை வங்கியில் செலுத்தி பின்னர் தான் ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்த முடியும். மேலும் சில நேரங்களில் ஆன்லைனில் தனியார் வங்கிகளில் கடைசி தேதியில் பணத்தை செலுத்தும் போது, அது வாரியத்தின் கணக்கிற்கு வருவதற்கு ஒரு நாள் ஆகிவிடுகிறது. வாரிய அலுவலகத்தில் பணம் கட்டியதற்கான சான்று இல்லாததால், தேவையில்லாமல் மின்துண்டிப்பு போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகளும் ஏற்படுகின்றன. எனவே மின்வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று மின் கட்டணம் கட்டும் முறை நடைமுறையில் இருப்பது அவசியம்.

கூடுதல் கட்டணம்

அந்தியூர் புதுப்பாளையத்தை சேர்ந்த இல்லத்தரசி சாந்தி:-

மின்கட்டணம் ரூ.1,000-த்துக்கு மேல் இருந்தால் ஆன்லைனில் கட்டவேண்டும் என்று கூறுகிறார்கள். படித்தவர்கள், ஸ்மார்ட் செல்போன் வைத்திருப்பவர்கள் மின்வாரிய செயலியை பயன்படுத்தி கட்டணம் செலுத்திவிடுவார்கள். படிக்காதவர்கள், ஸ்மார்ட் செல்போன் இல்லாதவர்கள் என்ன செய்வது?, தனியார் சேவை மையங்களுக்கு சென்று பணம் கட்டினால், கூடுதல் கட்டணம் கேட்கிறார்கள். சில இடங்களில் பணம் கட்டியதற்கு ரசீதும் கொடுப்பதில்லை. அதனால் பணம் சென்று சேர்ந்ததா? இல்லையா? என்ற அச்சமும் ஏற்படுகிறது. எனவே இந்த முறையை மாற்றுவதற்கு பரிசீலனை செய்யவேண்டும்.

வரவேற்கத்தக்கது

சத்தியமங்கலத்தை சேர்ந்த கே.கே.கதிரேசன்:-

மின் கட்டணம் ரூ.1,000-க்கு மேல் வந்தால் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என்பது வரவேற்கத்தக்கது. மின்கட்டணம் செலுத்த மின்வாரிய அலுவலகம் சென்று நீண்ட வரிசையில் நிற்கவேண்டியது இல்லை. மின்வாரியமே மின்கட்டணம் செலுத்த தனி செயலி வைத்துள்ளது. அதில் அனைத்து விவரங்களும் உள்ளன. அதன்மூலமே செலுத்திவிடலாம். இதனால் எந்த சிரமமும் இல்லை. மின்வாரிய அலுவலகத்தில் இட நெருக்கடியும் ஏற்படாது.

அலைச்சல் மிச்சம்

பெருந்துறை சீனாபுரத்தைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் புவனேஸ்வரி:-

மின் கட்டணத்தை செலுத்த கடைசி நாளன்று மின்வாரிய அலுவலகத்துக்கு செல்வோம். அங்கு நீண்ட வரிசை இருக்கும். காலை 10 மணிக்கு வரிசையில் நின்று மதியம் 1 மணிக்கு கட்டணம் கட்டிவிட்டு வந்த காலமும் உண்டு. இப்போது அந்த சிரமம் இல்லை. வீட்டில் இருந்தோ அல்லது வேலை பார்க்கும் இடத்திலோ இருந்தபடியே செல்போனில் உள்ள செயலியில் மின் கட்டணத்தை கட்டிவிடலாம். நேரமும், அலைச்சலும் மிச்சம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story