ஈரோடு வழியாக செல்லும் நீண்டதூர ரெயில்களில் போதுமான வசதி செய்து தரப்படுகிறதா?- பயணிகள் கருத்து


ஈரோடு வழியாக செல்லும் நீண்டதூர ரெயில்களில் போதுமான வசதி செய்து தரப்படுகிறதா?- பயணிகள் கருத்து

ஈரோடு

ஈரோடு வழியாக செல்லும் தன்பாத்- ஆலப்புழா, கவுகாத்தி, ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அதிக மக்கள் நெரிசல் கொண்டதாக உள்ளன. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை பல நூறு எண்ணிக்கையில் உள்ளது. இதுமட்டுமின்றி ரெயில்களுக்கு குடிநீர் நிரப்பும் முக்கிய ரெயில் நிலையமாகவும் இது விளங்குகிறது.

ஆயிரக்கணக்கில் வந்து செல்லும் பயணிகளுக்கு ரெயில்களிலும், பிளாட்பாரங்களிலும் போதிய வசதிகளை ரெயில்வே நிர்வாகம் செய்து தந்து உள்ளதா? அவை போதுமானதாக இருக்கிறதா? என்பது குறித்து பயணிகள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதன் விவரம் வருமாறு:-

கடும் நெரிசல்

தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணி சந்திரசேகரன்:-

நான் கோவையில் இருந்து இந்த ரெயிலில் ஏறினேன். அப்போதே கடுமையான நெரிசலில்தான் இருந்தது. நான் கிருஷ்ணகிரிக்கு செல்ல வேண்டும். குறைந்த தூரம் என்பதால் முன்பதிவு செய்யவில்லை. ஆனால், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளிலும் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் சாதாரண வகுப்பு பெட்டிபோல ஏறி உட்கார்ந்து இருக்கிறார்கள். கோவை, திருப்பூர் ரெயில் நிலையங்களிலேயே கட்டுக்கடங்காத கூட்டம். இப்போது ஈரோடு ரெயில் நிலையத்திலும் அப்படித்தான் இருக்கிறது. தன்பாத் ரெயில் நீண்ட தூரம் செல்லும் ரெயிலாக உள்ளது. இந்த ரெயிலை நம்பி வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் வந்து செல்கிறார்கள். ஆனால், இந்த ரெயிலில் 2-ம் வகுப்பு மற்றும் பொது வகுப்பு பெட்டிகள் மிகவும் குறைவாக உள்ளன. குளிர்சாதன பெட்டிகள் அதிகமாக உள்ளன. அதுேதவைதான். அதே நேரம் 2-ம் வகுப்பு மற்றும் பொதுப்பிரிவு பெட்டிகள் அதிகப்படுத்த வேண்டும். பெட்டிகள் அதிகரிப்பது கூட பயணிகளுக்கு ரெயில்வே நிர்வாகம் செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

தரமில்லாத உணவுகள்

தெற்கு ரெயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினரும், பயணியுமான சி.எஸ்.கவுதமன்:-

தொலை தூர ரெயில்களில் செல்லும் பயணிகள் பல்வேறு இன்னல்களையும் சந்திக்கிறார்கள். தற்போது ரெயில் பெட்டிகளில் சுகாதாரம் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. கழிப்பறைகள் சுத்தப்படுத்தப்படாமல் பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளன. பல நேரம் தண்ணீர் இருப்பதில்லை. ரெயில் பயணிகள் பலரும் ரெயில் பெட்டிகளில் திறந்த வெளியில் மது அருந்துவது நடக்கிறது. முன்பதிவு பெட்டிகளில் பயணித்து வருபவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் முன்பதிவு இல்லாத சாதாரண வகுப்பில் பயணம் செய்ய டிக்கெட் வாங்கியவர்கள் உட்கார்ந்து பயணம் செய்வதை டிக்கெட் பரிசோதகர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால் முன்பதிவு செய்த பயணிகள் அச்சத்துடனேயே செல்லவேண்டிய நிலை ஏற்படும். இதுகுளிர்சாதன வசதி பெட்டிகளிலும் இருப்பது வேதனையாகும். ரெயில் பயணிகளுக்கு விற்கப்படும் உணவுகள் தரமில்லாமல் உள்ளது. குடிதண்ணீர் பாட்டில்கள் அதிக விலையில் விற்கப்படுகிறது. சுத்திகரிக்கப்படாத தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்பது இன்னும் கொடுமை. எனவே ரெயில்களுக்குள் சுகாதாரமான உணவு, குடிநீர் வழங்கப்பட வேண்டியது அவசியம்.

தொழில்நுட்ப மாற்றம்

ஓய்வு பெற்ற முதன்மை லோகோ (ரெயில் என்ஜின்) ஆய்வாளர் டி.புஷ்பராஜ்:-

ரெயில்வே நிர்வாகம் சில ஆண்டுகளில் மிகப்பெரிய தொழில் நுட்ப மாற்றத்தை பெற்று இருக்கிறது. இதன் மூலம் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்பட்டு வருகிறது. ரெயில்களில் தீத்தடுப்பு மற்றும் தீ விபத்துகளை தடுக்க தீ கண்டறியும் கருவி பொருத்தப்பட்டு இருப்பதால், எங்கு சிறு தீப்பொறி ஏற்பட்டாலும் ரெயில் உடனடியாக தானாகவே நிறுத்தப்படும் வசதி உள்ளது. எனவே தீ விபத்துகள் இல்லாத நிலை உள்ளது.

சுற்றுச்சூழல் கழிவறைகள் அமைக்கப்பட்ட பிறகு ரெயில் நிலையங்களில் கழிவுகள் சேருவது இல்லை. இதனால் தூய்மை பணியாளர்கள் சிரமமின்றி பணி செய்கிறார்கள். குறிப்பாக ரெயில் என்ஜின் டிரைவர்களாக லோகோ பைலட் பணியாளர்களுக்கு பணி நேரம் குறைக்கப்பட்டு இருப்பதால் விபத்துகள் குறைகின்றன.

சிறப்பான வசதிகள்

தெற்கு ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் கு.இளங்கவி:-

ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு என்று சிறப்பான வசதிகள் உள்ளன. ஆன்லைனில் தங்கு விடுதி முன்பதிவு செய்வது, குளிர்சாதன வசதியுடன் கூடிய குறைந்த கட்டண தங்கும் அறை, சாதாரண தங்கும் அறை, பயணிகள் ஓய்வு அறை என்று வசதிகள் உள்ளன. விரைவில் மருத்துவ பரிசோதனை நிலையத்துடன் கூடிய மினி ஆஸ்பத்திரி கட்டப்பட உள்ளது. குளிர்சாதன பெட்டிகளில் செல்லும் பயணிகளுக்கு சுகாதாரமான உணவு, படுக்கை விரிப்பு, கம்பளி மற்றும் தலையணை உறைகள் வழங்கப்படுகின்றன. இதில் குறைபாடு இருந்து, அதுபற்றி ரெயில்வே நிர்வாகத்துக்கு ஆன்லைன் மூலம் புகார் தெரிவித்தால் கூட உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உணவின் சுவை, தரம் குறித்து அதற்கு என்று நியமிக்கப்பட்டு உள்ள அதிகாரிகள் தொடர் பரிசோதனை நடத்தி வருகிறார்கள்.

பயணிகளின் எண்ணிக்கை

இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ஈரோட்டில் இருந்து வட மாநிலங்களுக்கு புறப்படும் ரெயில்கள் எதுவும் இல்லை. கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கோவை, ஆலப்புழா பகுதிகளில் இருந்து புறப்படும் ரெயில்கள்தான் ஈரோடு வழியாக வடமாநிலங்களுக்கு செல்கின்றன. எனவே அந்த ரெயில்களுக்கான டிக்கெட்டுகள் முன்கூட்டியே முடிந்து விடுகின்றன. குளிர்சாதன பெட்டிகளில் தினசரி சராசரியாக 50-க்கும் குறைவானவர்களே ஈரோட்டில் இருந்து ஏறுகிறார்கள். 2-ம் வகுப்பில் 100-க்கும் குறைவானவர்கள்தான் ஏறும் நிலை உள்ளது. எனவே பெரும்பாலானவர்கள் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது என்றார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story