கெட்டி சமுத்திரம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் ரோட்டில் மேம்பாலம் அமைக்கப்படுமா?- வாகன ஓட்டிகள்-பொதுமக்கள் எதிர்பார்ப்பு


கெட்டி சமுத்திரம் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் ரோட்டில் மேம்பாலம் அமைக்கப்படுமா?- வாகன ஓட்டிகள்-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே உள்ள கெட்டி சமுத்திரத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. 17.5 அடி உயரம் கொண்ட இந்த ஏரியையொட்டி அந்தியூர்-மைசூரு ரோடு செல்கிறது. ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் மேற்கு கரை பகுதி ரோட்டை ஒட்டி நெருக்கமாக உள்ளது. இதனால் உபரிநீர் இந்த ரோட்டின் வழியாக வழிந்து மறுபக்கம் வடிகால் பகுதிக்கு செல்கிறது.

இந்த ரோட்டில் எப்போதும் பஸ், கார், வேன், இருசக்கர வாகன போக்குவரத்து இருக்கும். ரோட்டில் தண்ணீர் ஓடும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுவார்கள். சிலர் கீழே விழுந்து விடுகிறார்கள். மழை காலங்களில் ஏரி தன் முழு கொள்ளளவை எட்டும்போது அதிக அளவில் தண்ணீர் ரோட்டில் வழிந்தோடும். அதுபோன்ற நேரங்களில் இந்த வழியாக போக்குவரத்து தடைபடும். மேலும் அடிக்கடி தண்ணீர் செல்வதால் ரோடும் குண்டும், குழியுமாக சேதமடைந்து விடுகிறது.

வளைவாக உள்ளது

கர்நாடக மாநிலம் மைசூரு-மாதேஸ்வரன் மலை, கொள்ளேகால் செல்லும் கனரக வாகனங்கள் இந்த சாலையைதான் பயன்படுத்துகின்றன. ஏரி தண்ணீர் ரோட்டில் வழியும்போது மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. ஏரி நிறைந்துவிட்டால் சுமார் 6 மாதத்துக்கு உபரிநீர் மைசூரு ரோட்டில் சென்று கொண்டு இருக்கும். மேலும் தண்ணீர் வழியும் இந்த இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் சாலை மிகவும் வளைவாக உள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு சிெமண்டு, இருப்பு பாரம் ஏற்றிய லாரிகள் அதிக அளவில் சென்று வருகின்றன. அதேபோல் கர்நாடகாவில் இருந்து கோழி தீவனம் ஏற்றிய லாரிகள் வருகின்றன. இவ்வாறு அதிக பாரத்துடன் வரும் லாரிகள் வளைவில் திரும்ப முடியாமல் கவிழ்ந்துவிடுகின்றன. எனவே இந்த ரோட்டில் ஏரி உபரிநீர் வெளியேறும் இடத்தில் மேம்பாலம் அமைத்துக்கொடுக்கவேண்டும். அதேபோல் இருவழிப்பாதையாக மாற்றவேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

உயிரிழப்பு

கெட்டி சமுத்திரம் பகுதியை சேர்ந்த என்ஜினியர் மதிவாணன்:-

கெட்டி சமுத்திரம் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் இடத்திலேயே மைசூரு ரோடு செல்கிறது. 6 மாதம் தொடர்ந்து தண்ணீர் வெளியேறிக்கொண்டு இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் இதுவரை கீழே விழுந்துவிட்டார்கள். உயிரிழப்புகளும் ஏற்பட்டு விட்டன. இதேபோல் அதிக பாரம் ஏற்றிய லாரிகள் அடிக்கடி இந்த ரோட்டில் செல்கின்றன. எதிேர வரும் வாகனத்துக்கு வழிவிடக்கூட முடியவில்லை. எனவே இந்த இடத்தில் அகலமாக மேம்பாலம் அமைத்து தரவேண்டும்.

வர்த்தக உறவு மேம்படும்

அந்தியூரை சேர்ந்த வியாபாரி ஜி.கேசவன்:-

ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் வளர்ந்து வரும் நகரமாகும். தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கும், அங்கிருந்து தமிழ்நாட்டுக்கும் வணிக பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் அதிக எண்ணிக்கையில் கெட்டி சமுத்திரம் ரோடு வழியாக செல்கின்றன. ஆனால் கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏற்ற ரோடு வசதி இல்லை. ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் இடத்தில் மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை ஆவன செய்யவேண்டும். இதேபோல் வாகனங்கள் எளிதாக செல்ல இந்த ரோட்டை இருவழிப்பாதையாக்கவேண்டும். இவ்வாறு வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தால் இருமாநில வர்த்தக உறவு மேம்படும்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த இல்லத்தரசி ஆர்.வனிதா ரமேஷ்:-

குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் கொண்டு சென்று விடுவதற்காகவும், பல்வேறு வேலை நிமித்தமாகவும் நாள்தோறும் கெட்டி சமுத்திரம் ஏரி ரோட்டில் பெண்கள் இருசக்கர வாகனத்தில் சென்று வருகிறார்கள். தண்ணீர் வழிவதால் ரோடு குண்டும்-குழியுமாக மாறிவிட்டது. அதனால் பெண்கள் பலர் வாகனத்தில் இருந்து தடுமாறி விழுந்து காயமடைந்து இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு கூட ஸ்கூட்டரில் சென்ற பெண் ஒருவர் ஏரி தண்ணீர் வெளியேறும் இடத்தில் குண்டும், குழியுமாக இருந்ததால் தடுமாறி விழுந்தார். அவர் ஹெல்மேட் அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். எனவே கெட்டி சமுத்திரம் ரோட்டை உடனே சீரமைத்து மேம்பாலம் கட்டித்தரவேண்டும்.

நேரில் ஆய்வு செய்ய வேண்டும்

புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி வி.அருள்:-

கெட்டி சமுத்திரத்தில் ஏரியை ஒட்டி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு வளைந்து வளைந்து செல்கிறது. வாகன ஓட்டிகள் சற்று தடுமாறினாலும் விபத்து ஏற்பட்டு விடும். எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு சாலை வளைவாகவும், குறுகலாகவும் இருக்கிறது. மேலும் ரோடும் பழுதடைந்துவிட்டது. இதுவரை பல விபத்துகள் நடந்துவிட்டன. ஒவ்வொரு முறையும் இந்த பகுதி மக்களும், வாகனத்தில் செல்வோரும் இந்த ரோட்டை சீரமைத்து, அகலப்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். ஆனால் இதுவரை பணிகள் நடக்கவில்லை. நாள்தோறும் இருமாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அதற்கு ஏற்றபடி ரோடு தரமாகவும், அகலமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பது அவசியம். எனவே சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஏரியின் உபரிநீர் வெளியேறும் இடத்தை நேரில் ஆய்வு செய்து அந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும். ரோட்டையும் சீரமைத்து அகலப்படுத்தவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story