தாளவாடி மலைப்பகுதியில் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் கண்ணீர் விடும் விவசாயிகள்- ஒரு கிலோ முட்டைகோசை ஒரு ரூபாய்க்கு கேட்பதாக குமுறல்


தாளவாடி மலைப்பகுதியில் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் கண்ணீர் விடும் விவசாயிகள்- ஒரு கிலோ முட்டைகோசை ஒரு ரூபாய்க்கு கேட்பதாக குமுறல்

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தின் கடைகோடியில் கர்நாடக மாநிலத்தை ஒட்டி உள்ளது தாளவாடி. இதன் சுற்றுப்புற பகுதியில் கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர், பாரதி நகர், கெட்டவாடி, தலமலை, அருள்வாடி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இ்ங்குள்ளவர்களுக்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கத்தரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிடுவது வழக்கம். தற்போது இப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் 3 மாத பயிரான முட்டைக்கோசுக்கு 1 ஏக்கருக்கு நாற்று, களைஎடுத்தல், உரம், மருந்து என ரூ.80 ஆயிரம் வரை செலவு ஆகிறது. இம்முறை தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்பதால் பயிரிட்ட முட்டைகோஸ் நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. ஆனால் இவற்றை வாங்க வரும் வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைகோசுக்கு 1 ரூபாய் மட்டுமே விலை கொடுக்கின்றனர். இதனால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். தாளவாடி மலைப்பகுதியில் விளைவிக்கும் காய்கறிகள் ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர் போன்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் சில்லரை விற்பனையில் தற்போது முட்டைகோஸ் ஒரு கிலோ ரூ.30-க்கு விற்றாலும் விவசாயிகளிடம் இருந்து 1 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரிகள் கேட்கின்றனர். பல கிராமங்களில் 1 ரூபாய்க்கு கூட வியாபாரிகள் வாங்க தயங்குகின்றனர். இதனால் விவசாயிகள் முட்டைகோசை பறிக்காமல் செடியிலேயே விட்டு விடுவதால் செடியிலேயே அழுகிவரும் நிலைமை உள்ளது.

இதுகுறித்து பல்வேறு விவசாயிகள் கூறிய கருத்துகள் வருமாறு:-

பழனியம்மாள்

தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூரை சேர்ந்த விவசாயி பழனியம்மாள் என்பவர் கூறும்போது, 'நாங்கள் 4 ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் பயிர் செய்துள்ளோம். ஆனால் கடந்த 3 மாதங்களாக ஒரு கிலோ முட்டை கோைச மனசாட்சி இல்லாமல் 1 ரூபாய்க்கும், 2 ரூபாய்க்கும் கேட்கிறார்கள். இதனால் ஏக்கருக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இதற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என்றார்.

விஜயகுமார்

பீம்ராஜ்நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கூறும்போது, 'தாளவாடி மலைப்பகுதியில் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் எந்த காய்கறிகளுக்கும் உரிய விலை கிடைப்பது இல்லை. எங்களிடம் ஒரு கிலோ முட்டைகோசை ஒரு ரூபாய்க்கு கொள்முதல் செய்யும் வியாபாரிகள் கடைகளுக்கு கிலோ 30 ரூபாய்க்கு விற்கிறார்கள். இந்த வேதனை எப்போது தீரும் என்று தெரியவில்லை' என்றார்.

கப்பண்ணா

கரளவாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி கப்பண்ணா என்பவர் கூறும்போது, 'தாளவாடி மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகள் இங்குள்ள கமிசன் மண்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு இங்கு ஏல முறை பின்பற்றப்பட்டது. வியாபாரிகள் இங்கு வந்து ஏலம் கூறி காய்கறிகளை வாங்கி செல்வார்கள். ஆனால் கடந்த 1½ ஆண்டுகளாக ஏல முறை பின்பற்றப்படுவதில்லை. வியாபாரிகள் சிலர் வந்து குறைந்த விலைக்கு பேசி காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள். வெளியூர்களுக்கு தனியாக ஒரு விவசாயி காய்கறிகளை கொண்டு சென்று விற்க முடியாமல் குறைந்த விலைக்கு மண்டியில் காய்கறிகளை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையை மாற்ற காய்கறிகளை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

விஸ்வநாதன்

சூசைபுரம் கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கூறும்போது, 'தாளவாடி மலைப்பகுதியில் 1 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் முட்டைகோஸ் சில்லரை கடைகளில் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

போக்குவரத்து செலவு, ஆட்கள் கூலி என வியாபாரிகளுக்கு கிலோவுக்கு 5 ரூபாய்தான் ஆகும். அவர்களுக்கு கிலோவுக்கு 24 ரூபாய் லாபம் கிடைக்கும். ஆனால் விவசாயிக்கு போட்ட முதலீடு கூட கிடைப்பதில்லை.

எனவே விவசாயிகள் அனைத்து காய்கறிகளுக்கும் நியாயமான விலை நிர்ணயம் செய்யவேண்டும்.

விவசாயம் செய்வதே இப்போது கடினமாக உள்ளது. அதிலும் மலைப்பகுதியில் விவசாயம் செய்வது என்றால் நாங்கள் படும் கஷ்டம் நேரில் பார்த்தால்தான் தெரியும். மலையில் நேரடியாக வந்து அடிமாட்டு விலைக்கு வாங்கும் காய்கறிகளை தரையில் அதிக லாபத்தில் விற்கிறார்கள். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கவேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் விவசாயிகளுக்கு முறையான நியாயமான லாபம் கிடைக்கவேண்டும். அதற்கு அரசு விலை நிர்ணயம் செய்யவேண்டும்' என்றார்.


Next Story