இறந்தவர்கள் உடலை புதைக்க ஆபத்தை உணராமல் நீரோடையை கடக்கும் பொதுமக்கள்- அந்தியூர் புதுப்பாளையத்தில் பரிதாபம்


இறந்தவர்கள் உடலை புதைக்க ஆபத்தை உணராமல் நீரோடையை கடக்கும் பொதுமக்கள்- அந்தியூர் புதுப்பாளையத்தில் பரிதாபம்
x

அந்தியூர் புதுப்பாளையத்தில் இறந்தவர்களின் உடலை புதைக்க ஆபத்தை உணராமல் பொதுமக்கள் நீரோடையை கடக்கிறார்கள்.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் புதுப்பாளையத்தில் இறந்தவர்களின் உடலை புதைக்க ஆபத்தை உணராமல் பொதுமக்கள் நீரோடையை கடக்கிறார்கள்.

தரைப்பாலம்

அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் கெட்டிசமுத்திரம் ஊராட்சிக்கு உள்பட்டது புதுப்பாளையம். இங்கு ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் மயானம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு அவர்கள் இறந்தவர்களின் உடலை புதைத்து வருகின்றனர்.

இந்த மயானத்துக்கு செல்லும் வழியில் பெரிய ஏரியில் இருந்து வரக்கூடிய பெரிய நீரோடை உள்ளது. இதனை கடந்து தான் மயானத்துக்கு செல்ல முடியும். மயானத்துக்கு செல்லும் பாதையில் சிறிதாக தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இது பல ஆண்டுகளுக்கு முன்பு ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்து செல்லப்பட்டது. இதனை சரி செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நீரோடையை கடந்து சென்றனர்

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, 'பல ஆண்டுகளாக நீரோடையை கடந்து சென்று இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்து வருகிறோம். தற்போது அந்தியூர் பகுதியில் கன மழை பெய்து வருவதால் நீரோடையில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஓடுகிறது. இந்த நிலையில் இந்த பகுதியை சேர்ந்த ஒருவர் திடீரென்று உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது உடலை உறவினர்கள் சுமந்து கொண்டு ஆபத்தை உணராமல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நீரோடையை கடந்து சென்று அடக்கம் செய்தனர்.

அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மயானத்துக்கு செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்வதற்கு நீரோடையில் இறங்கி செல்ல வேண்டிய அவல நிலையில் உள்ளோம். உடனே மயான பகுதிக்கு செல்வதற்கு மேம்பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும்' என்றனர்.


Next Story