1½ ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் காசிபாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் புத்துயிர் பெறுமா?


1½ ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் காசிபாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் புத்துயிர் பெறுமா?

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 42 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகளில் பல்வேறு திட்ட பணிகள் தொடங்கப்பட்டு உரிய நிதி இல்லாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. அதன்படி கோபிசெட்டிபாளையம் தாலுகாவுக்கு உள்பட்ட காசிபாளையம் பேரூராட்சியிலும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டம் இதுவரை நிறைவு பெறாமல் உள்ளது.

காசிபாளையம் பேரூராட்சியில் சுமார் 3 ஆயிரத்து 200 வீடுகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு சத்தியமங்கலம் அருகே மாக்கினாங்கோம்பையில் செல்லும் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு பொது தெரு குழாய்கள் மூலமாக வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் பொதுமக்களின் நலனுக்காக காசிபாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.

ரூ.1 கோடியே 45 லட்சம் செலவிலான இந்த திட்டத்தை கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி காசிபாளையம் பேரூராட்சியிலேயே செல்லும் பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சுத்திகரித்து பொதுமக்களின் வீடுகளுக்கே வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பணிகளில் தொய்வு

பவானி ஆற்றங்கரையில் இடம் தேர்வு செய்யப்பட்டு கிணறு அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. மேலும், வீடுகளுக்கு சீராக குடிநீர் கிடைக்கும் வகையில் 1½ லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணி காந்திநகர் பகுதியில் தொடங்கப்பட்டது. தற்போது இந்த மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு தண்ணீரை தேக்கி வைக்க தயாராக உள்ளது. இதேபோல் வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணியில் தீவிரமாக நடந்து வந்தன. சுமார் ஆயிரம் வீடுகளுக்கு மேல் இணைப்பு கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பவானி ஆற்றில் கிணறு அமைக்கும் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. அங்கு கான்கிரீட் அமைக்கும் பணியும் நிலுவையில் இருப்பதால் கம்பிகள் மட்டுமே வெளியில் தெரிகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளார்கள்.

இதுபற்றி அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை காணலாம்.

காசிபாளையத்தை சேர்ந்த லட்சுமி:-

எங்கள் பகுதியில் தினமும் ஒரு மணிநேரம் மட்டும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொது குழாய்களில் காத்திருந்து தண்ணீர் பிடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஒருசில நாட்கள் தண்ணீர் வரவில்லை என்றால் பெரும் சிரமம் ஏற்படும். இதனால் 3 நாட்களுக்கு தேவையான குடிநீரை எப்போதுமே பிடித்து வைக்க வேண்டிய நிலை உள்ளது. கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் வீடுகளுக்கே குடிநீர் வரும். இதன் மூலமாக தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்கும். இந்த திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.

சூாியபிரகாஷ்:-

காசிபாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு 1½ ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். சில வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டு விட்டன. எனவே விரைவில் திட்டம் முடிவடைந்து விடும் காத்திருந்தோம். ஆனால் ஆற்றில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணி நடைபெறாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வீடுகளுக்கு குடிநீர் வந்துவிட்டால் பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். பொது குழாயில் தண்ணீருக்காக காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது.

வேலுமணி:-

மாக்கினாங்கோம்பையில் இருந்து தண்ணீர் எடுத்து காசிபாளையம் பேரூராட்சியில் வினியோகம் செய்யப்படுகிறது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் குடிநீர் வினியோகம் தடைபடும். அப்போது பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே அவர்கள் குடிநீருக்காக அலைய வேண்டிய நிலை உள்ளது. மேலும், ஆழ்துளை கிணற்று தண்ணீரை தான் பயன்படுத்த வேண்டும். எனவே கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் வரபிரசாதமாக அமையும். இதை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசின் சார்பில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த நிதி ஒதுக்கப்பட்டால் பேரூராட்சிகளில் கிடப்பில் உள்ள பல்வேறு பணிகளை செய்து முடிக்க முடியும். எனவே உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இவ்வாறு நிதி உதவி கிடைக்க பெற்றால் 2 மாதங்களில் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.


Next Story