முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவுநாள் ஊர்வலம் - நாளை போக்குவரத்து மாற்றம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவுநாள் ஊர்வலம் - நாளை போக்குவரத்து மாற்றம்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவுநாள் ஊர்வலத்தை முன்னிட்டு நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள அவருடைய உருவச்சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் அங்கிருந்து அவரது தலைமையில் தி.மு.க.வினர் மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்த உள்ளனர். இதனால் இப்பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

7-ந்தேதி காலை 8 மணியளவில் திருவல்லிக்கேணி ஓமந்தூரார் வளாகத்திலிருந்து, அண்ணாசதுக்கம் வரையில் அனுமதிக்கப்பட்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாகனங்கள் எளிதாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனினும் தேவைப்படும் பட்சத்தில் போர்நினைவு சின்னத்தில் இருந்து நேப்பியர்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜர் சாலை செல்ல அனுமதிக்காமல் கொடி மரச்சாலை வழியாக திருப்பி விடப்படும்.

காந்தி சிலையில் இருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் கண்ணகி சிலை வரை அனுமதிக்கப்பட்டு, பாரதிசாலை வழியாக திருப்பி விடப்படும். ஊர்வலம் வாலாஜா சாலைக்கு வரும் போது வாகனங்கள் அண்ணாசிலையில் இருந்து பெரியார் சிலை நோக்கி திருப்பி விடப்படும்.

அதனால் காலை நேரத்தில் அண்ணாசாலை, வாலாஜா சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் பயணத்தைத் திட்டமிடலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story