கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அவதூறு: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ராமதாஸ், அன்புமணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் நோட்டீஸ்


கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அவதூறு: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ராமதாஸ், அன்புமணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் நோட்டீஸ்
x

ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

சென்னை,

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் தி.மு.க. அரசு கடும் நடவடிக்கை எடுத்தும் கற்பனையாக, பொய்யாக அவதூறு பரப்புவதாக கூறி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு தி.மு.க. எம்.எல்.ஏக்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் தொடர்பாக வெளியிட்ட அறிக்கைகளுக்காகப் பா.ம.க. நிறுவனத் தலைவர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்குத் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் டி. உதயசூரியன் (சங்கராபுரம் தொகுதி) மற்றும் வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம் தொகுதி) ஆகியோர் பி.வில்சன் அசோசியேட்ஸ் மூலமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இந்த நோட்டீசைப் பெற்றுக்கொண்ட 24 மணி நேரத்துக்குள், ஏதேனும் ஒரு முன்னணித் தமிழ், ஆங்கில நாளேட்டின் ஒரு பதிப்பின் வாயிலாகவும் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களின் வாயிலாகவும் தங்களிடமும் கள்ளக்குறிச்சி மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்;

தமிழ்நாடு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்குத் தலா ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும்; இந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்றோ வேறு வகையிலோ பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story