கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மேலும் ஒரு முக்கிய சாராய வியாபாரி கைது


கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மேலும் ஒரு முக்கிய சாராய வியாபாரி கைது
x

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு முக்கிய சாராய வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் வாங்கிக்குடித்துள்ளனர். மெத்தனால் கலக்கப்பட்ட விஷ சாராயத்தை குடித்ததால் பலருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரும் உயிரிழந்தனர். ஒரு சிலர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். ஒருசிலர் வீட்டிலேயே உயிரிழந்தனர். விஷ சாராயம் குடித்து இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, விஷ சாராயம் குடித்த பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விஷ சாராயம் விற்றவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு முக்கிய சாராய வியாபாரியை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

சேஷசமுத்திரம் - குன்ன மேட்டு பகுதியை சேர்ந்த செந்தில் என்ற சாராய வியாபாரியை தனிப்படை போலீசார் இன்று கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தை தொடர்ந்து கல்வராயன்மலையில் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கல்வராயன்மலை சிறப்பு அதிரடிப்படையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான 38 பேர் அடங்கிய சிறப்பு அதிரடிப்படையினர் கல்வராயன்மலையில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு அதிரடிப்படையினருக்கு உதவியாக 80 ஆயுதப்படை போலீசாரும் கல்வராயமலையில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும்வரை கல்வராயன்மலையில் அதிரடிப்படையினர் முகாமிட்டிருப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


Next Story