பா.ஜனதாவுக்கு இனி இறங்கு முகம் தான்-கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பேட்டி


பா.ஜனதாவுக்கு இனி இறங்கு முகம் தான்-கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பேட்டி
x

பா.ஜனதாவுக்கு இனி இறங்கு முகம் தான் என்று கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார் தெரிவித்தார்.

பெரம்பலூர்

மாவட்ட செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கம், தமிழ்நாடு அமைப்பு சாராத்தொழிலாளர்கள் மத்திய சங்கம், பொன்.குமார் இளைஞர் அணி ஆகியவற்றின் சார்பில், வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சிவபெருமாள் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் சுந்தரம், செயலாளர் புவனேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தமிழ்நாடு அரசு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்.குமார் கலந்து கொண்டு நலவாரியம் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைக்கக்கூடிய நலத்திட்டங்கள், உதவித்தொகை, அவர்களின் பிள்ளைகளுக்கு கிடைக்கக்கூடிய கல்வி உதவித்தொகை உள்ளிட்டவைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். பின்னர் அவர் பெரம்பலூர் வடக்கு மாவட்டத்துக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிளை, ஒன்றிய நிர்வாகிகளுக்கு நிர்வாக அடையாள அட்டையை வழங்கினார்.

திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்

இதையடுத்து, பொன்.குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 10 ஆண்டு காலம் வாரியங்கள் முடங்கி கிடந்தன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அமைந்த பிறகு 2 ஆண்டு காலத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் மட்டும் ரூ.480 கோடி நலத்திட்ட உதவிகளாக தொழிலாளர்களுக்கு கொடுத்திருக்கிறோம் என்பது வரலாற்று சிறப்பு மிக்க சாதனை. கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில், எந்த நலத்திட்ட உதவிகளும் உயர்த்தப்படவில்லை. இன்றைக்கு எல்லா நலத்திட்ட உதவிகளின் தொகைகளை இரட்டிப்பு ஆக்கி இருக்கிறோம்.

தொழிலாளர்கள் வீடு கட்டிக்கொள்வதற்கு ரூ.4 லட்சம் இலவசமாக வழங்கக்கூடிய வரலாற்று சிறப்பு மிக்க திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். மருத்துவக்கல்லூரியில் படிக்கும் தொழிலாளர்களின் பெண் குழந்தைகளுக்கு மொத்த செலவை வாரியம் ஏற்றுக்கொள்ளக்கூடிய திட்டத்தையும் அறிவித்துள்ளோம். இவையெல்லாம் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்.

பா.ஜனதாவுக்கு இனி இறங்கு முகம்

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா மண்ணை கவ்வியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. இது ஜனநாயகத்தை யாராலும் சாகடிக்க முடியாது என்பதை நிலைநாட்டுவதற்கான அறிகுறியாகும். பா.ஜனதாவில் பிரதமர் மோடியின் வேடம் கலைந்து விட்டது. நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் எப்படிப்பட்ட வெற்றி கிடைக்கும் என்பதற்கான முன்னோட்டம் தான் இது. ஆகவே பா.ஜனதாவுக்கு இனி இறங்கு முகம் தான். தமிழ்நாடு பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரத்துக்கு சென்று கர்நாடகத்தில் பா.ஜனதாவை முடித்து விட்டார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டிலும் பா.ஜனதாவை முடித்து விட்டு தான் அண்ணாமலை அடுத்த வேலையை பார்க்க இருக்கிறார். அண்ணாமலையின் சகாப்தமும் இத்துடன் முடியவிருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெகதீசன், இணைச் செயலாளர் சிவகுமார், அமைப்பு செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story