நாட்டு இன மலை மாடுகள் குறைவதால் ஜல்லிக்கட்டுக்கு வர இருக்கும் பிரச்சினை


நாட்டு இன மலை மாடுகள் குறைவதால் ஜல்லிக்கட்டுக்கு வர இருக்கும் பிரச்சினை
x

நாட்டு இன மலை மாடுகள் குறைவதால் ஜல்லிக்கட்டுக்கு பிரச்சினை வர கூடிய சூழ்நிலை உள்ளது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

பாகுபலி படத்தில் வரும் ஒரு காட்சியை பார்த்து நாம் பிரமித்துப் போய் இருப்போம்.

ஏராளமான மாடுகள் கொம்பில் தீயுடன் பாய்ந்துவரும். ஆனால், நிஜத்தில் அதுபோன்று மாடுகள் மொத்தமாக வருவதை பார்க்க முடியுமா?

நகரங்களில் முடியாது. ஆனால், கிராமங்களில் சில நேரங்களில் அந்த காட்சி காணக்கிடைக்கும்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகள், மதுரை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கும் பகுதிகளில் எந்நாளும் இதுபோன்ற காட்சிகளை காணலாம்.

அதற்கு காரணம் நாட்டு இன மலை மாடுகள் வளர்ப்பு என்பது அங்கு பிரதானமாக விளங்குவதுதான்.

ஆயிரக்கணக்கில்...

விருதுநகர் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் வத்திராயிருப்பு, கான்சாபுரம், வ.புதுப்பட்டி, சேதுநாராயணபுரம், நெடுங்குளம், கூமாப்பட்டி, தாணிப்பாறை, மகாராஜபுரம், சுரக்காய்பட்டி மற்றும் அதன் அக்கம்பக்கத்து கிராமங்களிலும், மதுரை மாவட்டத்தில் பேரையூர், சாப்டூர், எழுமலை, உசிலம்பட்டி மற்றும் அதன் அக்கம்பக்கத்து ஊர்களையும் இதற்கு குறிப்பிடலாம். இங்கு நாட்டு இன மலை மாடுகள் ஆயிரக்கணக்கில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

ஜல்லிக்கட்டு

இந்த மாடுகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இயற்கை சூழ்நிலையில் பராமரிக்கப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டுக்காக இந்த மாடுகளின் இளங்கன்றுகளை வாங்கி செல்கின்றனர்.

பொதுவாக மலைப்பகுதியில் ஆறு மாத காலம் மேய்க்கப்படுகின்றன. பின்னர் இந்த மாடுகள் விளை நிலங்களுக்கு கொண்டு வரப்பட்டு, அறுவடை முடிந்த பின் வயல்களில் மேய்க்கப்படுகின்றன. இந்த மாடுகளை பயன்படுத்தி, உரத்திற்காக வயல்களில் கிடை அமர்த்துகிறார்கள். இந்த மாடுகள் மூலம் கிடைக்கும் இயற்கை உரத்தினால் விளைச்சல் நன்றாக இருக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

வனத்துறையினர் தடை

இந்த நிலையில் நாட்டு இன மலை மாடுகளை மலைப்பகுதியில் மேய்க்க வனத்துறையினர் தற்போது தடை விதித்துள்ளனர். இதனால் மாட்டை நம்பி பிழைத்து வருபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அரசின் இந்த நடவடிக்கையால், நாட்டு இன மலை மாடுகள் அழிவை நோக்கி செல்வதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேய்ச்சல் நிலம் இல்லாததால், நூற்றுக்கணக்கான மாடுகளை வைத்திருந்தவர்கள் தங்கள் மாடுகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து வருகிறார்கள்.

இதனால் நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைவது ஒரு பாதிப்பு என்றால், பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு துள்ளிவரும் தகுதியான காளைகள் எண்ணிக்ைக வருங்காலங்களில் குறையவும் வாய்ப்பு இருப்பதாக கவலை தெரிவிக்கிறார்கள். ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் இதுபற்றி விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.

மேய்ச்சலுக்கு அனுமதி?

விருதுநகர் மாவட்ட நாட்டு இன மலைமாடுகள் நலச்சங்க தலைவர் சுரேஷ்குமார் கூறியதாவது:-

கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நாட்டு இன மலை மாடுகளை மேய்க்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் மலைப்பகுதியில் மேய்ச்சலுக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. வளர்க்க முடியாமல் மாடுகளை விற்க கூடிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வாக மலைப்பகுதியில் மேய்ச்சலுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

தொழிலாளி முனியாண்டி கூறியதாவது:-

மலைப்பகுதியில் மேய்ச்சலுக்கு அனுமதி அளிக்காததால் மலை அடிவாரப்பகுதிகளில் உள்ள தரிசு விளை நிலங்களிலும், கண்மாய் பகுதிகளிலும் மாடுகளை மேய்த்து வருகிறோம். கண்மாய்கள் மற்றும் நீர் நிலைகளில் தண்ணீர் வந்து விட்டால் அங்கும் மேய்ச்சலுக்கு செல்ல முடியாது. இதனால் மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை படிப்படியாக விற்று வருகின்றனர். எங்களுக்கு மாடு மேய்ச்சல் தொழிலை விட்டால் வேறு தொழில் தெரியாது. குறைந்து வரும் மாட்டினால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தொழிலை நம்பி இருக்கும் ஏராளமான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கவும், அழிந்து வரும் நாட்டு இன மலைமாடுகளை காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Next Story