ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 50 பேர் காயம்


ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டி 50 பேர் காயம்
x

ஆர்.டி.மலையில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 50 பேர் காயம் அடைந்தனர்.

கரூர்

ஜல்லிக்கட்டு

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதன்படி நேற்று ஆர்.டி.மலையில் இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க திருச்சி, திண்டுக்கல், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 756 ஜல்லிக்கட்டு காளைகள் அழைத்து வரப்பட்டன. இவற்றை 367 மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். இதற்காக அதிகாலையில் இருந்தே காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். அவற்றுக்கு கால்நடை மருத்துவர்களால் உடல் தகுதி பரிசோதனை செய்யப்பட்டு, வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்பட்டன. காலை 8.10 மணிக்கு வாடிவாசல் முன்பு மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

சீறிப்பாய்ந்த காளைகள்

இதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டை குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பாதேவி தலைமையில், கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி லியாகத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாடுபிடி வீரர்கள் ஒரு குழுவுக்கு 50 பேர் வீதம் பிரிக்கப்பட்டு களத்தில் மாடுபிடிக்க அனுமதிக்கப்பட்டனர்.

முதலில் வாடிவாசல் வழியாக 75 கோவில் காளைகள் சீறிப்பாய்ந்து வெளியேறின. இதைத்தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களின் கையில் சிக்கின. சில காளைகள் வீரர்களை நெருங்க விடாமல் ஆட்டம் காட்டின.

பரிசுகள்

தொடர்ந்து காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சைக்கிள், கட்டில், சில்வர் பாத்திரம் உள்பட பல்வேறு பரிசு பொருட்கள், ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்பட்டன. காலை 8.10 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெற்றது. மாலை வரை நடந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 50 பேர் காயம் அடைந்தனர். இவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக 7 பேர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் ஏராளமான போலீசார் செய்திருந்தனர்.

21 காளைகளை பிடித்த மாடுபிடிவீரர்

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர் கே.எம்.டி. கார்த்திக் என்பவர் 21 மாடுகளை பிடித்து முதல் பரிசை தட்டி சென்றார். காவல்காரன்பட்டி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த மாடுபிடி வீரர் சிவகுமாரை ஒரு காளை கண்ணில் முட்டியதில் கண்பார்வை இழந்தார்.


Next Story