ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு


ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு
x

அலங்காநல்லூர் அருகே மலை அடிவாரத்தில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க தேர்வு செய்த இடத்தை அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு செய்தனர்.

மதுரை

அலங்காநல்லூர்,

அலங்காநல்லூர் அருகே மலை அடிவாரத்தில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க தேர்வு செய்த இடத்தை அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு செய்தனர்.

ஜல்லிக்கட்டு அரங்கம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற கூட்டத்தின் போது, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அலங்காநல்லூர் அருகே குட்டிமேக்கிபட்டி ஊராட்சி கீழக்கரை வடக்கு பகுதியில் உள்ள வகுத்து மலை அடிவாரத்தில் ஜல்லிக்கட்டு அரங்கம் சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து, வரைபடம் வைத்து ஆய்வு செய்யப்பட்டது.

50 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வகையில் இந்த அரங்கம் அமைகிறது. அந்த இடத்தை பார்வையிட்டு அமைச்சர் மூர்த்தி, மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன், தாசில்தார் நவநீதகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், ஊரக வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தனி பெருமை

பின்னர் அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குறிப்பிட்ட தேதியில் வழக்கம்போல் ஆண்டுதோறும் அங்கேயே நடைபெறும். மேலும் இங்கு தேர்வு செய்யப்படும் இடத்திற்கும் அதற்கும், எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. புதிதாக கட்டப்படும் அரங்கத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவை, உலகஅளவில் உள்ள மக்கள் வந்து பார்வையிடுவார்கள். மேலும் இங்கு ஜல்லிக்கட்டு நடைபெறுவது குறித்து அரசும் மாவட்ட நிர்வாகமும் கலந்துபேசி பின்னர் தெரிவிக்கும்.

முதற்கட்ட பணியாக இடம் தேர்வு செய்து ஆய்வு செய்யப்பட்டுஉள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த வகுத்து மலை அடிவாரத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம் அமைவது .தனி பெருமை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story