யானைகள் மின்வேலியில் சிக்கி இறந்தால் 7 ஆண்டுகள் சிறை


யானைகள் மின்வேலியில் சிக்கி இறந்தால் 7 ஆண்டுகள் சிறை
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானைகள் மின் வேலியில் சிக்கி உயிரிழந்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தண்டோரா மூலம் வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

யானைகள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிகளில் யானைகள், காட்டுப்பன்றிகள், மான்கள் போன்ற வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. இவை உணவு, தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. சில நேரங்களில் யானைகள் தாக்கி விவசாயிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க மின் வேலிகள் அமைத்து வருகின்றனர். இதில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சிக்கி உயிரிழந்து வருகின்றன.

இந்த நிலையில் ராயக்கோட்டை வனச்சரகர் பார்த்தசாரதி தலைமையில், ஆலப்பட்டி பிரிவு வனவர் சரவணன், வனக்காப்பாளர் புட்டுகான் ஆகியோர் நேற்று மோரனஅள்ளி, பனகமுட்லு, சாப்பரம், சோக்காடி உள்ளிட்ட வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்தனர்.

7 ஆண்டுகள் சிறை

அப்போது விவசாயிகள் தங்கள் நிலங்களில் மின்வேலி அமைக்கக்கூடாது. வனவிலங்குகள் பயிர்களை சேதம் செய்தால் அதற்கு இழப்பீடு வழங்கப்படும். உணவுக்காக வரும் யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தால் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அரசு தடையை மீறி மின்வேலி, மின்கம்பி, அமைக்கப்பட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

காட்டுப்பன்றிகளுக்கு நாட்டு வெடிகுண்டு வைக்கக்கூடாது. கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் வனத்துறை, போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். வனப்பகுதி அருகே பட்டா நிலத்தில் விவசாய கிணறு அமைக்கும் பட்சத்தில் கிணற்றை சுற்றி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ்களை வழங்கப்பட்டன.


Related Tags :
Next Story