பகல் முழுவதும் விட்டு, விட்டு பெய்த சாரல் மழை
திண்டுக்கல்லில், பகல் முழுவதும் சாரல் மழை விட்டு, விட்டு பெய்தது. சுட்டெரிக்கும் சூரியனை விரட்டியடிக்கும் வகையில், கார்மேக கூட்டம் வானத்தை ஆக்கிரமித்தது.
மழையில் நனைந்த மாணவர்கள்
திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் பெய்ய தொடங்கிய மழை அதிகாலை 4 மணி வரை நீடித்தது. அதன் பின்னர் காலையில் 7.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேல் இந்த மழை தொடர்ந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்று மாணவ-மாணவிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால் கொடைக்கானல், சிறுமலை பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. திண்டுக்கல் மற்றும் பிற பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. இதனால் கொட்டும் மழையில் நனைந்தபடியே பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் சென்றது பரிதாபமாக இருந்தது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அதன் பின்னர் மழை பெய்வது நின்றது. ஆனால் சிறிது நேரத்திலேயே சாரல் மழை பெய்ய தொடங்கியது. நேற்று பகல் முழுவதும் சுட்டெரிக்கும் சூரியனை விரட்டியடிக்கும் வகையில், கார்மேக கூட்டங்கள் வானத்தை ஆக்கிரமித்து இருந்தன. இதனால் வெயிலின் தாக்கம் தெரியவில்லை.
இதுமட்டுமின்றி பகல் முழுவதும் விட்டு, விட்டு சாரல் மழையும் பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நிழற்குடை வசதி செய்யப்படாததால் மழையில் நனைந்தபடியும், நடைமேடைகளில் கூட்ட நெரிசலில் நின்றபடியும் பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
நாள் முழுவதும் சாரல் மழையாக பெய்ததால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. ஆனால் பெருக்கெடுத்து ஓடவில்லை. தேங்கி நின்ற மழைநீரில் சிறுவர், சிறுமிகள் குடையை கவிழ்த்து போட்டு விளையாடி மகிழ்ந்தனர். மழை காரணமாக சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.