மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரவேற்புடையதா?


மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரவேற்புடையதா? என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விருதுநகர்

நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் மாநில சட்டசபை ஆகியவற்றில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. நாடாளுமன்ற மேலவையிலும் இது நிறைவேறிய பிறகு சட்டவடிவம் பெறும். 2021-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்தப்படவில்லை. எனவே மக்கள் தொகை கணக்கு எடுப்புக்குப் பிறகு 2029-ம் ஆண்டு வாக்கில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான கட்சிகள் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை வரவேற்கின்றன. பிரதான கட்சிகள் உள் ஒதுக்கீடு கேட்கின்றன.

2010-ம் ஆண்டு இந்த இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு மக்களவையில் நிறைவேறாமல் போனது குறிப்பிடத்தக்கது.

இந்தனை ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இந்த மசோதா தற்போது அவசர, அவசரமாக நிறைவேற்ற காரணம் என்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் எழுந்து உள்ளன.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

வரவேற்பு

நோபிள் கல்லூரி முதல்வர் வேல்மணி:-

நாடாளுமன்றத்தில் புதிய அரங்கில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா முதன் முதலில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் எந்த அடிப்படையில் 33 சதவீதம் என நிர்ணயிக்கப்பட்டது என்பது புரியவில்லை. ஆணுக்கு பெண் சமம் என்று பேசுகிறோம். பல்வேறு துறைகளில் ஆண்களை விட பெண்கள் சாதிப்பது அதிகமாகி வருகிறது.

அறிவியல்துறையில் நம் பெண்களின் சாதனை உலகம் போற்றும் அளவில் உள்ளது. அவ்வாறு இருக்கையில் 50 சதவீத இட ஒதுக்கீடு என்பதுதான் நியாயமாகவும், தர்மமாகவும் இருக்கும். எனினும் தற்போதாவது இதற்கு முதல் அடி எடுத்து வைத்துள்ளது வரவேற்புக்குரியது.

அரசுக்கு நன்றி

ஏழாயிரம்பண்ணை ஆசிரியை அமுதா:-

பெண்கள் கல்வி கற்றால் ஒரு தலைமுறையே முன்னேறும். பெண்கள் அனைத்து துறையிலும் முன்னேறி வரும் இந்த சூழ்நிலையில் இந்த இட ஒதுக்கீடு மிகவும் வரவேற்கத்தக்க அம்சமாகும்.

இனி அரசியலிலும் பெண்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்துவார்கள்.

இட ஒதுக்கீடு அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி.

அரசியல் நாடகம்

ராஜபாளையம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நகர செயலாளர் மேரி:-

மத்திய அரசு பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்துள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூர்,

ஹரியானா கலவரத்தை மறைப்பதற்கு இந்த திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. நாங்கள் இதை கண்துடைப்பு நாடமாகத்தான் நினைக்கிறோம். இது ஒரு அரசியல் நாடகம்.

அனைத்து துறை

வக்கீல் லாவண்யா:-

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்அடிப்படையில் மத்திய அரசு தற்போது நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அனைத்து துறைகளிலும் இட ஒதுக்கீடு பெண்களுக்கு கிடைக்கும்.

மேலும் 33 சதவீத இட ஒதுக்கீடு செய்ததை நாங்கள் பெருமையுடன் வரவேற்கிறோம்.

தாமதமான நடவடிக்கை

மடத்துப்பட்டி ஆசிரியை ஜெயமேரி:-

மகளிருக்கான இட ஒதுக்கீடு அரசியல் நாடகமாகும். வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து கொண்டுவரப்பட்ட சட்டமாகும். பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கான பாலியல் தொல்லை கொடுத்தபோது மத்திய அரசு முழுமையாக நடவடிக்கை எடுக்கவில்லை. சமூக நீதி காப்பாற்றப்படவில்லை. தற்போது இட ஒதுக்கீடு அறிவிப்பு மிகவும் தாமதமான நடவடிக்கையாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story