பள்ளிக்கூடங்களில் சீருடை திட்டம் முறையாக செயல்படுகிறதா?


பள்ளிக்கூடங்களில் சீருடை திட்டம் முறையாக செயல்படுகிறதா?
x
தினத்தந்தி 20 Jun 2023 7:00 PM GMT (Updated: 20 Jun 2023 7:01 PM GMT)

பள்ளிகளில் சீருடை அணியும் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா? சமத்துவப்பார்வையில் சீருடை அணியப்படுகிறதா? என்பவை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

தேனி

கல்வித்துறையில் தமிழகம் பெற்றுவரும் வளர்ச்சிக்கு வித்திட்டவர் பெருந்தலைவர் காமராஜர். அவர் முதல்-அமைச்சராக இருந்த போதுதான் மதிய உணவு, இலவச சீருடை, பள்ளி சீரமைப்பு இயக்கம் உள்ளிட்ட முக்கியமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அனைவரும் சமம்

பள்ளிக்கூடம் என்று வந்துவிட்டால் ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், சாதி, மதம், இனம் வேறுபாடின்றி அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் சீருடை முறையை காமராஜர் கொண்டு வந்தார்.

குறிப்பாக தமிழக பள்ளிகளில் சீருடை 1964-1965-ம் கல்வியாண்டில் கொண்டுவரப்பட்டது. அது அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள், உதவிபெறும் தனியார் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது. வாரம் ஒருநாள் (திங்கட்கிழமை) மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும்.

நீலநிற கால்சட்டை அல்லது பாவாடை, வெள்ளை நிற மேல்சட்டை அணிந்து வரவேண்டும். 1964-1965-க்கு முன்பு சில தனியார் பள்ளிகளில் சீருடை அணியும் பழக்கம் இருந்தது. ஆனால் தற்போது அரசு பள்ளிகளை பொறுத்தவரையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே நிறத்தில் சீருடைகள் உள்ளன. அதேபோல், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும், ஒவ்வொரு நிறத்தில் சீருடை முறை இருந்து வருகிறது. அதேபோல், தனியார் பள்ளி நிர்வாகங்கள் விரும்பும் நிறத்தில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சீருடை முறைகளை வைத்து உள்ளனர். இந்தநிலையில், பள்ளிகளில் சீருடை அணியும் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா? சமத்துவப்பார்வையில் சீருடை அணியப்படுகிறதா? அல்லது நாகரிக நோக்கில் அணியப்படுகிறதா? என்பவை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

பெற்றோர் கண்காணிப்பு

உப்புக்கோட்டையை சேர்ந்த குடும்பத்தலைவி வைத்தீஸ்வரி கூறும்போது, 'மாணவர்களிடம் சீருடை சீரற்ற வகையில் இருப்பதை காண முடிகிறது. இறுக்கமாக ஆடை அணிவது. காலில் குட்டையாகவும், இறுக்கமாகவும் பேண்ட் அணிவதும் சிலரின் விருப்பமாக இருக்கிறது. மாணவர்கள் சீருடையை ஒழுங்காக தைத்து போடுகிறார்களா? என்பது பெற்றோர்கள் கைகளில்தான் உள்ளது. பெற்றோர்கள் சரியாக கண்காணித்தால் தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை. சில தனியார் பள்ளிகளில் பள்ளி நிர்வாகமே சீருடை தைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்கிறது. அதுபோன்ற இடங்களில் ஒழுங்கீனம் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் பெற்றோர்களுக்கு கட்டணச்சுமை அதிகமாக வந்து சேரும்' என்றார்.

வடிவமைப்பில் மாற்றம்

தேனியை சேர்ந்த பள்ளி ஆசிரியை தெய்வசங்கரி கூறும்போது, 'மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் ஒரே சமம் என்பதை பறைசாற்றுவதற்காக சீருடை முறை கொண்டு வரப்பட்டது. பள்ளி நிர்வாகம் கூறும் நிறங்களில் மாணவர்கள் சீருடை அணிகிறார்கள். ஆனால், அதன் வடிவமைப்பில் சில மாற்றங்களை மாணவர்கள் செய்து அணிகிறார்கள். தையல் கலைஞர்கள் அதுபோன்று பள்ளிச் சீருடையை ஒழுங்கீனமாக அணியும் வகையில் தைத்துக் கொடுக்கக்கூடாது. பெற்றோர்களின் பங்களிப்பு தான் அதில் முக்கியம். தலையில் கோடுகள் போட்டு முடி வெட்டுவது, காதில் கடுக்கன் அணிவது போன்றவற்றை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். மாணவிகளை விட மாணவர்கள் தான் ஒழுங்கீனமாக ஆடை அணிவதை பார்க்க முடிகிறது. ஒழுக்கத்தோடு சேர்ந்த கல்வி தான் உயர்வை தரும்' என்றார்.

அனைவருக்கும் ஒரே சீருடை

பாலார்பட்டியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியை ஜோஸ்பின் கூறும்போது, 'மிடுக்காக உடை அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். தோற்றப்பொலிவையும் மேம்படுத்தும். நல்ல முறையில் உடை அணிந்திருக்கும் நபர் பலரின் கவனத்தை கவர்ந்து, அவர்களால் விரும்பப்படுகிறார். அதேபோல் மாணவர்களும் பள்ளி நிர்வாகம் கூறும் நிறத்தில், வடிவத்தில் சீருடை அணிவது அவர்களுடைய வெற்றிக்கும் காரணமாக அமையும். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை, பெற்றோர்கள் விலகி இருப்பது போன்ற காரணங்களால் மாணவர்களின் மனநிலையும் பாதிக்கப்பட்டு கல்வியிலும், சீருடையிலும் அதிக கவனம் செலுத்தாமல் விரும்பும் வகையில் கல்வி நிறுவனங்களுக்கு வந்து செல்கின்றனர். அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஒரே நிறத்தில் சீருடை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்' என்றார்.

கம்பீரம்

உத்தமபாளையத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் யுவனேஷ் கூறும்போது, 'பள்ளி மாணவர்கள் ஒரே சீராக சீருடை அணிவதன் மூலம் வகுப்பறையில் ஒழுக்கம் நிறைந்து இருக்கும். ஒரே சீராக சீருடை அணியாமல் வந்தால் ஒவ்வொரு மாணவனும் விதவிதமாக ஆடை அணிந்து வருவதால் ஒழுக்கம் என்பது கேள்விக்குறியாகும். நான் படிக்கும் பள்ளியில் சீருடை நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள். என் பெற்றோரும் ஆள்பாதி, ஆடை பாதி என்பதால் பிறர் மதிக்கும் வகையில் ஆடை அணிய வேண்டும் என்பார்கள். இவ்வாறு சீருடை அணிவது மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது' என்றார்.

ஒழுக்கம் தவறக்கூடாது

கம்பத்தை சேர்ந்த எழுத்தாளர் பாரதன் கூறும்போது, 'ஆடை சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. யார் என்ன ஆடை உடுத்த வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க உரிமை உண்டு. உடை ஒருவரின் நடையை மாற்றும்.அதே நேரத்தில் பள்ளிகளில் சீருடை அணியும் போது, ஒழுக்கம் தவறக்கூடாது. மாணவர்கள் ஒழுக்கத்தை கடை பிடித்தால் நேர்த்தியாக உடை அணியத் தொடங்கி விடுவார்கள். கல்வி நிறுவனங்கள் உடையில் காட்டும் அக்கறையை விட பன்மடங்கு அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுப்பதில் காட்ட வேண்டும்' என்றார்.

கண்டமனூர் மாணவர் விடுதி காப்பாளர் ஆனந்தன் கூறும்போது, 'பள்ளி திறந்தபோது சில மாணவர்கள் இருக்கமாகவும், உயரம் குறைவாகவும் ஆடை அணிந்து வந்தனர். அதை ஒழுங்கீனமான செயல் என்று அறிவுரை செய்தேன். பின்னர் அவர்கள் அந்த சீருடைகளை சரிசெய்து கொண்டார்கள். மாணவர்களின் மீது பெற்றோருக்கு இருக்கும் அக்கறை விடுதி காப்பாளர்களுக்கும் இருக்க வேண்டும். அதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் சீருடையும் அனைவருக்கும் நேர்த்தியாக இருப்பதில்லை. சிலருக்கு பெரியதாகவும், சிலருக்கு உயரம் குறைவாகவும் இருக்கிறது. அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் உடல்வாகிற்கு ஏற்ப சீருடை கிடைத்தால் மேலும் சிறப்பாக இருக்கும்' என்றார்.

உத்தமபாளையத்தை சேர்ந்த முதுகலை ஆசிரியர் கார்த்திக் கூறும்போது, 'பள்ளி மாணவர்கள் சீருடை அணிவதன் மூலம் மாணவர் களிடையே ஏற்றத்தாழ்வு என்பது இல்லாமல் போகும். ஒரு மாணவனின் ஒழுக்கம் தான் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு அச்சாணியாக இருக்கும். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்களை ஒழுங்குபடுத்துவது சவால் நிறைந்ததாக தான் இருக்கிறது' என்றார்.

அதிகாரிகள்

தமிழக கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'அரசு உத்தரவுப்படி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்காக ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டு பள்ளி தொடங்குவதற்கு முன்பாக அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதனை பெற்றுக்கொண்ட பள்ளி நிர்வாகங்கள் அவர்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடையாக வழங்குகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான சீருடை அமல்படுத்துவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இதுதொடர்பாக துறையிலும் பெரிய அளவில் எந்த திட்டமும் தற்போது இல்லை.

தமிழக அரசின் 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பள்ளி கல்வி துறைக்கு ரூ.40 ஆயிரத்து 290 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பள்ளிக்கல்வி துறையில் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைப்பதற்கு ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் மூலம் 12.7 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். நவீன விடுதிகள் கட்டவும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று தான் சீருடை, கல்வி உபகரணங்களும் வாங்கி பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் சீருடை வேறு மாதிரி இருப்பதால் அரசு சார்பில் வழங்கப்படும் சீருடைக்கான துணி வேண்டாம் என்கின்றனர். ஆனால் அவர்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் சீருடை வழங்க முடியாத ஒரு சில மாணவர்களுக்கு அரசு வழங்கும் சீருடைகளும் வழங்கப்படுகிறது' என்றனர்.


Next Story