கடைசி நாளில் மின்கட்டணம் செலுத்துவதில் குளறுபடி


கடைசி நாளில் மின்கட்டணம் செலுத்துவதில் குளறுபடி
x

ஆன்லைன் மூலம் கடைசி நாளில் மின்கட்டணம் செலுத்துவதில் குளறுபடி ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

அரியலூர்

தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது வீட்டு பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 85 பைசா வரையிலும், வணிக பயன்பாட்டுக்கான மின்சார கட்டணம் யூனிட்டுக்கு ரூ.2.72 வரையிலும் அதிகரித்தது. அதன்பின்னர் 8 ஆண்டுகளாக மின்சார கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்து வந்தது.

மின்கட்டணம் உயர்வு

இந்தநிலையில் மின்சார வாரியத்தின் நிதி நிலைமையை காரணம் காட்டி மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான மின் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ெவளியிட்டார்.

அதன்படி 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 என்ற வீதத்திலும், 1,000 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு ரூ.11 என்ற வீதத்திலும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி 200 யூனிட் பயன்படுத்துவோருக்கு குறைந்தபட்சமாக ரூ.55 வரையும், 900 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக ரூ.1,130 வரையும் கட்டணம் உயர்ந்து இருக்கிறது. மேலும், மின்கட்டணம் செலுத்த தவறினால் அதற்கான அபராத தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

அபராதம் விதிப்பு

இந்தநிலையில், மின்சார வாரியத்தின் ஆன்லைன் கட்டணம் செலுத்தும் சர்வர் மின்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாளில் வேலை செய்யாமல் இருந்து வருகிறது. இதனால் கூகுள் பே, பேடிஎம் உள்ளிட்டவைகள் மூலம் மின் கட்டணம் செலுத்தும் நுகர்வோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஒருசில நேரங்களில் மின் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து விடுகிறார்கள். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

காலஅவகாசம் வழங்க வேண்டும்

திருச்சி பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த நூர்முகமது:- மின்கட்டணத்தை கூகுள் பே, பேடிஎம், போன்பே உள்ளிட்ட ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என மின்வாரியம் தான் அறிவித்துள்ளது. ஆனால் அந்த பணம் கிரெடிட் ஆகாவிட்டால் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தொழில்நுட்ப கோளாறால் ஏற்படும் தவறுகளுக்கு மக்கள் எப்படி பொறுப்பாக முடியும். அப்படியானால், கடைசி நாட்களில் மின்கட்டணம் செலுத்துபவர்கள் நேரடியாக அலுவலகத்துக்கு வந்து தான் செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் செலுத்தக்கூடாது என்ற அறிவிப்பை வெளியிடுங்கள் அல்லது பணம் கிரெடிட் ஆகாமல் திரும்பி விட்டால் அதற்கு உடனடியாக அபராதம் விதிக்காமல் காலஅவகாசம் வழங்க வேண்டும்.

ஏற்கனவே மக்கள் மின்கட்டணம் உயர்த்தப்பட்டதாலும், விலைவாசி உயர்வு காரணமாகவும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள். இதில் ஜிபே மூலமாக பணம் செலுத்தும்போது ஒரு சில நேரங்களில் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கலுக்கு அபராதம் விதிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் ஆகும். ஆகவே இந்த பிரச்சினைக்கு மின்வாரியம் மாற்று ஏற்பாடு செய்து மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேளூர் துணை மின் நிலையம்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகன்:- விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மின்சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும், மின் கட்டணம் செலுத்துவதற்கும் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேளூர் துணை மின் நிலையத்திற்கு தான் செல்ல வேண்டி உள்ளது. எனவே விக்கிரமங்கலத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மின்கட்டணம் செலுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாங்கள் ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்துவதற்கு கொடுக்கப்பட்ட கடைசி நாளில் பணம் செலுத்தும் போது சரியான நேரத்திற்கு போய் சேராமல் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு அபராதம் செலுத்தவும் நேரிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு நிரந்த தீர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடைசி தேதியில் ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்துவதை தவிர்க்க வேண்டும்

அதிகாரிகள் வேண்டுகோள்

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று மின் கட்டணத்தை செலுத்தி செல்வதால் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். இதனை தவிர்க்கவே இருந்த இடத்தில் இருந்து ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது. ஆனால் மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாளில் பலர் ஒரே நேரத்தில் ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்துவதால் பல்வேறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு மின் வாரியத்துக்கு மின் நுகர்வோர்களின் பணம் வந்து சேருவதில்லை. இதனால் மின் நுகர்வோர்களின் வங்கி கணக்கிற்கே பணம் திரும்ப போய்விடுகிறது. இதனால் தான் அவர்களுக்கு மின் கட்டணம் செலுத்தக்கோரி குறுஞ்செய்தி வருகிறது. கடைசி தேதி முடிந்து மறுநாள் கட்டும் போது அபராதத்துடன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க மின் நுகர்வோர்கள் ஆன்லைனில் கடைசி தேதியில் மின் கட்டணம் செலுத்தாமல், அதற்கு சில நாட்களுக்கு முன்பே கட்டணத்தை செலுத்தி விடுவது நல்லது. கடைசி தேதியில் மின் கட்டணம் செலுத்த நினைக்கும் நுகர்வோர்கள் சிரமத்தை கருத்தில் கொள்ளாமல் நேரிடையாக கவுண்ட்டருக்கு வந்து கட்டி விட்டு செல்லுங்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story