அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கியதில் முறைகேடு


அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கியதில் முறைகேடு
x

உளுந்தூர்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டையில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள 264 வீடுகளை வழங்குவதற்காக ஏற்கனவே பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் எந்தந்த வீடு என ஒதுக்கும் பணி நேற்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.

இதில் சிலருக்கு மட்டும் குலுக்கல் முறையில் வீடு ஒதுக்கும் பணி நடைபெற்றதாக தெரிகிறது. இதையறிந்த மற்ற பயனாளிகள் அனைவருக்கும் குலுக்கல் முறையில் உடனே வீடு ஒதுக்க வேண்டும் என கோரி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அங்கு வந்த பொதுமக்கள், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்குவதற்காக பயனாளிகள் தேர்வு செய்ததில் முறைகேடு நடந்துள்ளது.

தகுதியுடைய பயனாளிகள்

வீடு பெற்ற பயனாளிகள் பட்டியலில் சிலர் கோடீஸ்வரர்களாகவும், நகைக் கடை அதிபர்களாகவும் உள்ளனர். எனவே வசதிபடைத்தவர்களின் பெயர்களை பயனாளிகளின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். மேலும் தகுதியுடைய ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே வீடு வழங்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளிடம் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், நகரமன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணை தலைவர் வைத்தியநாதன், ஆணையர் சரவணன் ஆகியோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்.

இதில் 150-க்கும் மேற்பட்டோருக்கு முறைகேடாக வீடு வழங்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகளிடம் தகுதி உள்ள பயனாளிகளுக்கு மட்டுமே வீடுகள் வழங்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து குலுக்கல் நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திவிட்டு அங்கிருந்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

நடவடிக்கை

இது குறித்து பொதுமக்களிடம், அதிகாரிகள் கூறுகையில், இது தொடர்பாக கலெக்டரிடம் தகவல் தெரிவித்து பயனாளிகள் பட்டியலை மறுதணிக்கை செய்து தகுதியுடையவர்களுக்கு மட்டும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story