இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை


இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை
x

குடிநீர் தொட்டியை மர்ம ஆசாமிகள் அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார்.

புதுக்கோட்டை

குடிநீர் தொட்டி அசுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மர்ம ஆசாமிகள் அசுத்தம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு பால்பாண்டி தலைமையில் 35 பேர் கொண்ட 10 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் நேற்று முன்தினம் வரை 60 நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு உள்ளது.

விசாரணை

இந்தநிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு தில்லை நடராஜன் புதுக்கோட்டையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினார். இதில் 4 நாட்களாக நடைபெற்று வரும் விசாரணையின் நிலைகுறித்து கேட்டறிந்ததோடு அனைத்து தரப்பு மக்களிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதனைதொடர்ந்து இறையூர் கிராமத்தில் சி.பி.சி.ஐ.டி. தனிப்படை போலீசார் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story