7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாநிலத்தில் 2-வது இடம்:'ஏழைகளுக்கு தரமான மருத்துவ வசதி கிடைக்க உழைப்பேன்'தர்மபுரி அரசு பள்ளி மாணவர் பேட்டி


7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாநிலத்தில் 2-வது இடம்:ஏழைகளுக்கு தரமான மருத்துவ வசதி கிடைக்க உழைப்பேன்தர்மபுரி அரசு பள்ளி மாணவர் பேட்டி
x
தினத்தந்தி 16 July 2023 7:30 PM GMT (Updated: 16 July 2023 7:30 PM GMT)
தர்மபுரி

பென்னாகரம்:

மருத்துவ படிப்பிற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தர்மபுரி அரசு பள்ளி மாணவர் பச்சையப்பன் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். ஏழைகளுக்கு தரமான மருத்துவ வசதி கிடைக்க உழைப்பேன் என்று அவர் கூறினார்.

மாணவர் சாதனை

தமிழ்நாட்டில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்ற மாணவ, மாணவிகளின் தரவரிசை பட்டியலை நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இதில், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மாங்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் பச்சையப்பன் மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் நீட் தேர்வில் 565 மதிப்பெண் பெற்று இந்த தரவரிசையில் இடம்பிடித்துள்ளார்.

இது குறித்து மாணவர் கூறியதாவது:-

எனது தந்தை சுந்தரமூர்த்தி பெங்களூருவில் கூலி வேலை செய்து வருகிறார். தாயார் இந்திராணி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். எனது தாத்தா பாட்டி அரவணைப்பில் தான் நான் பள்ளி படிப்பை முடித்தேன். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த எனது தாயாருக்காக மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

இலவசமாக மருத்துவம்

இதன் காரணமாக கடுமையாக படித்து தற்போது 565 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2-ம் இடம் பெற்றுள்ளேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மருத்துவம் படித்து என் தாயாருக்கும், அவரை போல் உள்ளவர்களுக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும். ஏழைகளுக்கு தரமான மருத்துவ வசதி கிடைக்க உழைப்பேன்.

இவ்வாறு மாணவர் கூறினார். மாநில அளவில் சாதனை படைத்த மாணவரை ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.


Next Story