தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு
கனிமவளங்கள் கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கிணத்துக்கடவு,
கனிமவளங்கள் கடத்தலை தடுக்க தமிழக-கேரள எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கனிமவளங்கள் கடத்தல்
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, நெம்பர்10. முத்தூர், தேவராயபுரம், சிங்கையன்புதூர், சொக்கனூர், வடபுதூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இங்கு அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி சட்டவிரோதமாக கற்கள், மணல் போன்ற கனிமவளங்கள் லாரிகளில் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதற்கு விவசாய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் கனிமவளங்கள் கடத்தலை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. இதைதொடர்ந்து பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட கோபாலபுரம், செமனாம்பதி, நடுப்புணி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் கண்காணிக்க கிராம நிர்வாக அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று முதல் தமிழக-கேரள எல்லையில் உள்ள கிணத்துக்கடவு அருகே வீரப்ப கவுண்டனூர் சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தீவிர கண்காணிப்பு
அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்து, வாகன எண்களை பதிவு செய்தனர். மேலும் கனிம வளங்களை ஏற்றி வரும் லாரிகளில் சோதனை மற்றும் ஆவணங்களை சரிபார்த்த பின்னரே லாரிகள் கேரளாவுக்குள் செல்ல அனுமதித்தனர்.
இதுகுறித்து வருவாய்த் துறையினர் கூறும்போது, வீரப்ப கவுண்டனூர் சோதனைச்சாவடியில் கிராம நிர்வாக அலுவலர்கள் 3 குழுக்களாக கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நேற்று கிணத்துக்கடவு அருகே கக்கடவில் வருவாய்துறை சார்பில் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றதால் சோதனைச்சாவடியில் கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லை. மதியத்திற்கு மேல் கிராம நிர்வாக அலுவலர்கள் வீரப்ப கவுண்டனூர் சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர்.
இதேபோல் தமிழக-கேரள எல்லையில் உள்ள கோபாலபுரம், நடுப்புணி உள்ளிட்ட சோதனைச்சாவடிகளிலும் சுழற்சி முறையில் குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விதிமுறைகளை மீறி கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.