தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு


தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு
x

கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு எதிரொலி காரணமாக தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு எதிரொலி காரணமாக தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

குரங்கு அம்மை

கேரள மாநிலத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த 2 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கேரள மாநிலம் சாலக்குடியில் இருந்து மளுக்கப்பாறை வழியாக வால்பாறைக்கு வரும் வாகனங்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதன்படி தமிழக-கேரள எல்லைகளில் கேரளாவில் இருந்து வருபவர்களின் கை, கால் மற்றும் உடலில் கொப்புளங்கள் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

வாகன ஓட்டுனர்களின் உரிம எண், செல்போன் எண், வாகனங்களின் பதிவு ஆகியவற்றை பதிவு செய்த பின்னரே அவர்கள் வால்பாறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

எல்லையில் தீவிர கண்காணிப்பு

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவின் பேரிலும் கோவை மாவட்ட கலெக்டர் அறிவுரையின் பேரிலும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் வழிகாட்டுதலின் பேரிலும் தமிழக கேரள எல்லையான சேக்கல்முடி சோதனைச்சாவடியில் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாபுலட்சுமண் தலைமையில் சோலையாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று முதல் பரிசோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பாலு கூறியதாவது:-

வால்பாறை பகுதியில் உள்ள பொதுமக்கள் பலரும் கேரளாவிற்கு அடிக்கடி சென்று வரக்கூடிய நிலை உள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த தனியார் பஸ் தினந்தோறும் கேரள மாநிலம் சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு வந்து செல்கிறது. தற்போது கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும். யாருக்காவது நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story