தீவிரம் அடையும் தென்மேற்கு பருவமழை - கோடநாடு சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


தீவிரம் அடையும் தென்மேற்கு பருவமழை - கோடநாடு சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x

கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் கடந்த 2 நாட்கள் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் புதூர் பகுதியில் மழையின் காரணமாக சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று சாலையின் குறுக்கே சரிந்து விழுந்தது.

இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த கோத்தகிரி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் கருப்புசாமி மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் மாதன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story