ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம்
வேலூர் மாவட்டத்தில் 43 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
காட்பாடி
வேலூர் மாவட்டத்தில் 43 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
வேளாண்மை வளர்ச்சி திட்டம்
வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பாக வேலூர் மாவட்டத்தில் உள்ள 43 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் தொடக்க விழா காட்பாடி தாலுகா கரசமங்கலம் ஊராட்சியில் நடந்தது. இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் வரப்பு பயிர் உளுந்துகள், பேட்டரி தெளிப்பான்கள், காய்கறி விதைகள், பழச்செடிகள், பயிர் ஊக்கத்தொகை ஆகியவற்றை கலெக்டர் குமரவேல் பாண்டியன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, வேளாண் இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீட்சித், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், ஒன்றியக் குழு தலைவர் வேல்முருகன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம்
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சீவூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு குடியாத்தம் வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.உமாசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டி.கிருஷ்ணமூர்த்தி, நுண்ணீர் பாசன திட்ட துணை இயக்குனர் ஆர்.விஸ்வநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தீபிகாபரத், அமுதாலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி, துணைத் தலைவர் அஜீஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன், குடியாத்தம் தொகுதி அமலுவிஜயன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு இந்த திட்டத்தின் கீழ் 25 விவசாயிகளுக்கு விசைத் தெளிப்பான்கள், உரங்கள், விதைகள், வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார்கள். கிராம நிர்வாக அலுவலர் உஷா, ஊராட்சி உதவியாளர் செழியன் உள்பட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் கொண்ட சமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள், விசைத்தெளிப்பான் உள்ளிட்டவைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கார்த்திகேயன், சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கே.வி.குப்பம்
கே.வி.குப்பத்தை அடுத்த தேவரிஷிகுப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கோபி, மாவட்ட கவுன்சிலர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் அபிலா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் காய்கறி விதைகள், மண்புழு உரம், இயற்கை உரங்கள் உள்ளிட்ட பொருட்களை விவசாயிகள், பொதுமக்கள் பெற்றுச் சென்றனர். உதவி அலுவலர் ஹரி நன்றி கூறினார்.