தர்மபுரி மாவட்டத்தில், இன்று சட்டசபை பொது கணக்கு குழுவினர் ஆய்வு


தர்மபுரி மாவட்டத்தில், இன்று சட்டசபை பொது கணக்கு குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 2 July 2023 7:00 PM GMT (Updated: 3 July 2023 6:14 AM GMT)
தர்மபுரி

தமிழ்நாடு சட்டசபை பொது கணக்கு குழுவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்கிறது. சவுந்தர பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையிலான இந்த குழுவில் எம்.எல்.ஏக்கள், மாநில அரசு அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் முதற்கட்டமாக ஒகேனக்கல்லில் காலை 9 மணிக்கு மஞ்சப்பை வழங்கும் எந்திரத்தை தொடங்கி வைக்கிறார்கள். பின்னர் மாரண்டஅள்ளி அருகே உள்ள ஹட்சன் நிறுவனத்திலும், சோகத்தூரில் உள்ள துணை மின் நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்கின்றனர். தொடர்ந்து தடங்கம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிப கழக டாஸ்மாக் குடோனில் இந்த குழுவினர் ஆய்வு செய்கிறார்கள்.

இதனை தொடர்ந்து தடங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் ரோடு பணிகள், பூதானஅள்ளியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோன், ஏ.ஜெட்டிஅள்ளியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல விடுதி, மதிகோன்பாளையத்தில் உள்ள தர்மபுரி நகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை இந்த குழுவினர் ஆய்வு செய்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு சட்டசபை பேரவை பொது நிறுவனங்கள் குழு சார்பில் தணிக்கை மற்றும் தன்னாய்வு குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள்.


Next Story