நீர்வள, நிலவளத்திட்ட பணிகள்


நீர்வள, நிலவளத்திட்ட பணிகள்
x
தினத்தந்தி 17 Feb 2023 6:45 PM GMT (Updated: 17 Feb 2023 6:46 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர்வள, நிலவளத்திட்ட பணிகளை அரசு கூடுதல் தலைமை செயலர் தென்காசி ஜவகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர்வள, நிலவளத்திட்ட பணிகளை அரசு கூடுதல் தலைமை செயலர் தென்காசி ஜவகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, கால்நடைத்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, வேளாண் வணிக ஆகிய துறைகளின் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை அரசின் கூடுதல் தலைமை செயலரும், தமிழ்நாடு நீர்வள நிலவளத்திட்ட இயக்குனருமான தென்காசி ஜவகர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக அவர் கிருஷ்ணகிரி அணை வளாகத்தில், பாசனத்திற்காக அணையில் இருந்து நீர் வெளியேற்று கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு மேற்கொண்டார். இதன் மூலம் பாசன வசதி பெறும் பரப்பளவு குறித்தும், பாசனத்தால் தென்னை, நெல், மல்லிகை பூ உற்பத்தி செய்யும் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

வேளாண் பணிகள்

பின்னர் காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் மிட்டஅள்ளி கிராமத்தில் தமிழ்நாடு நீர்வளம் நிலவளத் திட்டம், கிருஷ்ணகிரி முதல் பாம்பாறு உபவடி நிலப்பகுதி திட்டத்தில் மலடு நீக்க சிகிச்சை முகாம் நடைபெறுவதை அவர் பார்வையிட்டார். அப்போது கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகளை வழங்கினார். தொடர்ந்து கால்நடை வளர்ப்போருக்கு தாது உப்பு கலவைகளை வழங்கினார்.

தொடர்ந்து குண்டலப்பட்டி ஊராட்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வேளாண் பணிகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் ஜெகதாப் ஊராட்சியில் காய்கறிகள் மற்றும் தக்காளி நாற்றுகள் உற்பத்தி செய்து, கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் இதர மாவட்ட விவசாயிகளுக்கு நாற்றுகள் வினியோகம் செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டார். நாற்று உற்பத்தி, தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

கலெக்டருடன் ஆலோசனை

பின்னர், பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகைளில் நீர்மேலாண்மை திட்ட பணிகள் குறித்து கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, சென்னை நீர் மேலாண்மை வல்லுனர் கிருஷ்ணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், கூடுதல் தலைமை பொறியாளர் ராமன், வேளாண்மை இணை இயக்குனர் முகமதுஅஸ்லாம், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பாஸ்கர், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், துணை இயக்குனர் மரியசுந்தரம், உதவி இயக்குனர் அருள்ராஜ், குண்டலப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாஸ்கர் மற்றும் விவசாயிகள், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story