அர்க்கீஸ்வரர் கோவிலில் வரலாற்று குழுவினர் ஆய்வு


அர்க்கீஸ்வரர் கோவிலில் வரலாற்று குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Jan 2023 6:45 PM GMT (Updated: 23 Jan 2023 6:46 PM GMT)

மதகொண்டப்பள்ளி அர்க்கீஸ்வரர் கோவிலில் வரலாற்று குழுவினர் ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணகிரி

மதகொண்டப்பள்ளி அர்க்கீஸ்வரர் கோவிலில் வரலாற்று குழுவினர் ஆய்வு செய்தனர்.

கோவிலில் ஆய்வு

தேன்கனிக்கோட்டை தாலுகா மதகொண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள அர்க்கீஸ்வரர் கோவிலில் மாவட்ட அரசு அருங்காட்சியகமும், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த கோவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 5 அடி அளவுக்கு மண் மூடி இருந்தது. முன்னாள் தலைவர் ராஜண்ணா மற்றும் ஊர் மக்கள் அந்த மண்ணை அகற்றி கோவிலை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த ஆய்வின் போது அந்த ஊரை சேர்ந்த முன்னாள் தலைவர் ராஜண்ணா, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், வரலாற்று ஆசிரியர் ரவி, செல்வகுமார் மற்றும் ஊர் மக்கள் உடனிருந்தனர்.

இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

நிலம் தானம்

இந்த கோவிலில் 3 கல்வெட்டுகள் காணப்படுகிறது. அதில் முதலாவது கல்வெட்டில், ஒய்சாள மன்னர் வீரவிஸ்வநாதனின் 3-ம் ஆட்சி ஆண்டான பொது ஆண்டு 1296-ல் மத்தகாமுண்டன் பள்ளி திரு அங்கநாதீஸ்வரம் கோவில் திருப்பணிக்காக குடையாளம் என்ற ஊரில் உள்ள நிலம் தானம் அளிக்கப்பட்ட செய்தி குறிப்பிடுகிறது. 2-வது கல்வெட்டு ஒய்சாள மன்னர் 3-ம் வல்லாளனின் ஆட்சிக்காலமான பொது ஆண்டு 1300-ல் ஊரில் நிலத்தை தானம் அளித்த செய்தியை தெரிவிக்கிறது. இந்த கல்வெட்டு தற்போதுள்ள மதகொண்டப்பள்ளி 700 ஆண்டுகளுக்கு முன்பு மத்தகாமுண்டன்பள்ளி என்பதை தெரிவிக்கிறது. 3-ம் கல்வெட்டு அங்கீஸ்வரமுடையார் கோவிலுக்கு பல வரிகள் தானமாக அளிக்கப்படும் செய்தியை காட்டுகிறது.

ராஜேந்திர சோழன்

ஒய்சாள மன்னர்கள் இந்த கோவிலை கட்டுவதற்கு முன் கி.பி 1020-ல் ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழன் இந்த இடத்தில் குணநல்லூர் மகாதேவர் கோவிலை கட்டி உள்ளார். காலமாற்றத்தால் அந்த கோவில் இடிந்ததால் இங்கு ஒய்சாளர்கள் அங்கீஸ்வரமுடையார் கோவிலாக கட்டி இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story