கட்டண கழிப்பிடத்தில் நகராட்சி தலைவர் திடீர் ஆய்வு


கட்டண கழிப்பிடத்தில் நகராட்சி தலைவர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Nov 2022 6:45 PM GMT (Updated: 9 Nov 2022 6:45 PM GMT)

தர்மபுரி பஸ் நிலைய கட்டண கழிப்பிடத்தில் நகராட்சி தலைவர் திடீர் ஆய்வு செய்தார்.

தர்மபுரி

தர்மபுரி நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையங்களில் உள்ள கட்டண கழிப்பிடங்களில் சிறுநீா் கழிக்க 1 ரூபாய்க்கு பதில் 10 ரூபாய் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடா்ந்து நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, ஆணையாளா் சித்ரா சுகுமார் ஆகியோர் தர்மபுரி புறநகர் மற்றும் டவுன் பஸ் நிலையங்களில் உள்ள கட்டண கழிப்பிடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். டவுன் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறையில் குளியல் அறையில் மின்விளக்கு பொருத்த வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினர். கட்டண கழிப்பிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டண கழிப்பிடங்களில் முறையாக பராமரிக்காமல் இருந்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் டவுன் பஸ் நிலையத்தில் பூக்கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததை தொடர்ந்து பணியாளர்கள் பூக்களை பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வின் போது நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், நகரமைப்பு அலுவலர் ஜெயவர்மன், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர் சுசீந்திரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story