பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஆய்வு


பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 8 Nov 2022 6:45 PM GMT (Updated: 8 Nov 2022 6:45 PM GMT)

கடத்தூர் பகுதியில் பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஆய்வு செய்துகாலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல் செய்தார்.

தர்மபுரி

கடத்தூர் பகுதியில் உள்ள பேக்கரி கடைகள், அடைக்கப்பட்ட குடிநீர், குளிர்பான கடைகள் மற்றும் சிறு வணிக கடைகள் உள்ளிட்டவற்றில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்கள், அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள், குளிர் பான கடைகளில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நந்தகோபால் திடீர் ஆய்வு செய்தார். அப்போது உரிய தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி மற்றும் முடிவு தேதி விபரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளனவா? என ஆய்வு செய்யப்பட்டது. கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள், உரிய விபரங்கள் இல்லாத குளிர் பானங்களுடன் உரிய விபர சீட்டு இல்லாத தின்பண்டங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. குடிநீர் கேன்கள், அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர் பானங்கள் வெயில் படும்படி வைக்கக்கூடாது என எச்சரிக்கை செய்யப்பட்டது.இந்த ஆய்வின் போது 2 கடைகளில் அச்சிட்ட பேப்பரில் எண்ணெய் பலகாரங்கள் காட்சிப்படுத்தியும், வினியோகித்ததையும் பார்த்த உணவு பாதுகாப்பு அலுவலர் அதனை பறிமுதல் செய்தார். தொடர்ந்து அச்சிட்ட தாள்களில் எண்ணெய் பலகாரங்கள் பொட்டலமிடுதல் மற்றும் வினியோகம் செய்ய கூடாது என அறிவுறுத்தினார். மேலும் ஒரு பேக்கரியில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பார்சலிட்ட சூடான டீயை பறிமுதல் செய்தார். மேலும் அந்த கடைக்கு ரூ.1,000 அபராதம் விதித்தார். குளிர்பான மொத்த விற்பனை நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் போது குளிர்பானங்கள் தரம் கண்டறிய மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பகுப்பாய்வு ஆய்வறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


Next Story