டாஸ்மாக் கடை திறக்க கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் சாலைமறியல்


டாஸ்மாக் கடை திறக்க கூடாது என வலியுறுத்தி    கிராம மக்கள் சாலைமறியல்
x

டாஸ்மாக் கடை திறக்க கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் சாலைமறியல்

திருவாரூர்

கோட்டூரில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைமறியல்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை திறக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பாடு நடந்தது. இதனை கண்டித்து கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து கோட்டூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்கவில்லை. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று டாஸ்மாக் கடை திறக்க கூடாது என வலியுறுத்தி கிராம மக்கள் கோட்டூர் பஸ் நிலையத்தில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்த கிராம மக்கள் கோட்டூர் பஸ் நிலையத்தில் சாலையில் அமர்ந்து, கோட்டூர் அடைப்பாறு அருகே அரசு டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தில் அரசு பெண்கள் பள்ளி, மாணவி விடுதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தீயணைப்பு நிலையம் மற்றும் பொதுமக்கள் குளிக்கும் படித்துறை ஆகியவை அமைந்துள்ளது. எனவே இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

இந்த போராட்டத்தால் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி செல்லும் போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி தாசில்தார் ஜீவானந்தம், திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து உரிய நடவடிக்ைக எடுக்கப்படும் என அவர்கள் கூறினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த போராட்டத்தால் அந்தபகுதியில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story