ஊராட்சி செயலாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி கூட்டம்
சீர்காழி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி கூட்டம் நடந்தது.
சீர்காழி:
சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கான திறன் தொழில்நுட்ப புத்தாக்க பயிற்சி கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சிகள்) அருள்மொழி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. பின்னர் உதவி இயக்குனர் மஞ்சுளா பேசுகையில், ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சி செயலர்களும் தங்கள் ஊராட்சியில் உள்ள குடிநீர் தொட்டிகளை மாதம் இருமுறை சுத்தம் செய்து சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் வளர்ச்சிப்பணிகள் குறித்த பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக ஊராட்சிகளில் குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அடிப்படையில் குறைபாடுகள் இருந்தால் ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கூட்டத்தில் மேலாளர் செல்வமுத்துக்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனாட்சி, திருநாவுக்கரச மற்றும், ஊராட்சி செயலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.