வருகிற 2-ந் தேதி முதல் 3 நாட்கள்ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாட நடவடிக்கைஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி தகவல்


வருகிற 2-ந் தேதி முதல் 3 நாட்கள்ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாட நடவடிக்கைஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி தகவல்
x
தினத்தந்தி 22 July 2023 7:30 PM GMT (Updated: 22 July 2023 7:30 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழா வருகிற 2-ந் தேதி முதல் 3 நாட்கள் சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவை நடத்துவது குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். ஜி.கே.மணி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆலோசனை வழங்கினர்.

கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்திற்கு சிறப்பு பெற்ற ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவினை நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா வருகிற 2.8.2023 முதல் 4.8.2023 வரை 3 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள். விழாவில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அறியும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க கண்காட்சி அரங்குகள் அமைத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலை நிகழ்ச்சிகள்

விழாவை முன்னிட்டு 3 நாட்களிலும் சுற்றுலா துறை, சேலம் மண்டல, கலைபண்பாட்டுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழாவிற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகளுக்கு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகள் செய்தல், தடையில்லா மின்சாரம் வழங்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், தற்காலிக கழிப்பிட வசதிகள், கூடுதல் போக்குவரத்து வசதிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க தேவையான முன்னேற்பாடு பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் சுற்றுலா துறை, வனத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story