ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 11 மதகுகள் வழியாக உபரிநீர் ஆற்றில் திறப்பு-கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து 11 மதகுகள் வழியாக உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து 11 மதகுகள் வழியாக உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஆழியாறு அணை

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஒப்பந்தப்படி கேரளாவுக்கு ஆண்டுதோறும் 7 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது. இதை தவிர குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக அணை முழுகொள்ளளவை எட்டியது. அதன்பிறகு போதிய மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கடந்த 22&ந்தேதி அணை 115 அடியை எட்டியதை தொடர்ந்து முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் மின் உற்பத்தி செய்யப்பட்டு காடம்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் அப்பர் ஆழியாறு வழியாக ஆழியாறு அணைக்கு வந்தது.

உபரிநீர் வெளியேற்றம்

நீர்வரத்து அதிகரித்ததால் மதகுகள் வழியாக பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அதன்பிறகும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் 11 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி ஆழியாறு அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 322 கன அடி தண்ணீர் வந்தது. அந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய உச்சரிக்கை விடுப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் 11 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆழியாறு அணையின் மதகு பகுதிக்கு வந்து புகைப்படம் எடுத்தனர். அவர்களை பொதுப்பணித்துறை ஊழியர்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் ஆழியாறு அணைக்கு வந்து நீர்வரத்தை ஆய்வு செய்தனர். மேலும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கண்காணிப்பு

தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து உள்ளது. இதற்கிடையில் அப்பர் ஆழியாறு அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியும், நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து வினாடிக்கு 1300 கன அடியும் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் 3864 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்கலாம். தற்போது 3678 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 120 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 118 அடியாக உள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீர்வரத்தை கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

.

ஆற்று வெள்ளத்தில் மீன்பிடித்த வாலிபர்கள்


தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக நேற்று அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆழியாற்றில் வெள்ள கரைபுரண்டு ஓடியது. வால்பாறை ரோட்டில் உள்ள பாலத்தின் மேல் நின்று சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் நின்று வெள்ளத்தை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது சிலர் தண்ணீரை பார்த்து அங்கு பாரு, தண்ணீரில் மூழ்கி விட்டது என்று சத்தம் போட்டனர். இதற்கிடையில் சிறிது தாமதிக்காமல் 4 பேர் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஆற்று வெள்ளத்தில் யாரோ அடித்து செல்லப்படுகிறார்கள் என்று நினைத்து பாலத்தின் இருபுறமும் ஓடினர். சிறிது நேரத்தில் வாலிபர் ஒருவர் ஆற்றில் இருந்து பெரிய மீனை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாக வெளியே வந்தார். இதுகுறித்து அந்த வாலிபர்களிடம் கேட்டதற்கு, சின்ன வயதில் இருந்தே போதிய பயிற்சி எடுத்தால் தான் ஆற்று வெள்ளத்தில் செல்லும் மீனை பிடிக்க முடியும். வெள்ளத்தில் மீனை பார்த்து விட்டால் குதிக்கும் போது அந்த மீனின் உடலில் நேரராக குதிப்போம். பின்னர் அந்த மீனை தூக்கி கொண்டு வெள்ள போக்கில் நீந்தியப்படி கரைக்கு வந்து விடுவோம். தண்ணீரில் குதித்ததும் பயம் இருக்க கூடாது என்றனர். ஆற்று வெள்ளத்தில் மீன் பிடிப்பது என்பது விளையாட்டாக இருக்கலாம். ஆனால் அதே நேரத்தில் வெள்ளத்தில் சிக்கி கொண்டால் என்னவாகும் என்பதை யோசிக்க வேண்டும். இதை அதிகாரிகளும் கவனிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.



Next Story