வருமானவரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் அதிகாரி தகவல்


வருமானவரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு  விழிப்புணர்வு கூட்டத்தில் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 13 Sep 2023 7:00 PM GMT (Updated: 13 Sep 2023 7:08 PM GMT)

வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என விழிப்புணர்வு கூட்டத்தில் அதிகாரி கூறினார்.

சிவகங்கை

காரைக்குடி,

வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என விழிப்புணர்வு கூட்டத்தில் அதிகாரி கூறினார்.

விழிப்புணர்வு கூட்டம்

காரைக்குடி வருமான வரி அலுவலகத்தில் வருமான வரி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காரைக்குடி வருமானவரி அலுவலர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். வருமான வரி ஆய்வாளர் பத்மாவதி வரவேற்றார். ஆடிட்டர் சங்க தலைவர் வெங்கடாசலம் விளக்கவுரையாற்றினார். ஆடிட்டர் துவாரகநாத், தொழில் வணிக தலைவர் சாமிதிராவிடமணி, தேவகோட்டை வர்த்தக சங்க தலைவர் மாணிக்கம் வாழ்த்துரை வழங்கினார்.

கூட்டத்தில் வருமானவரித்துறை அதிகாரி சுப்பிரமணியம் பேசுகையில், கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 15 சதவீதம் கூடுதலாக வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நடப்பாண்டிலும் குறிப்பிட்ட காலத்திற்குள் முறையாக செலுத்தி இலக்கை அடைவதற்கு உதவ வேண்டும். மேலும் நிதி ஆண்டு முடிந்த பின்பு, முடிந்த ஆண்டிற்கான வரியை செலுத்துவதை தவிர்த்து, நடப்பு ஆண்டிலேயே முன்கூட்டி வரியை செலுத்தி, வரி மீதான வட்டியை தவிர்க்க வேண்டும்.

பின் விளைவு

கடந்த ஆண்டில் அதற்கு முந்தைய ஆண்டை விட 90 சதவீதம் கூடுதலாக செலுத்தப்பட்ட வரி திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை கடந்த ஆண்டு இதே காலத்தில் செலுத்தப்பட்ட ரீபண்ட் தொகையை விட 15 சதவீதம் கூடுதலாக ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை காட்டிலும் 5 சதவீதம் அதிகரித்துள்ளது. வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் முன் வருமான வரி வெப்சைட்டில் இருக்கும் ஆண்டு தகவல் அறிக்கையை சரி பார்த்து, பின்னர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதன் மூலம் ஏதாவது விடுதல்களால் ஏற்படும் பின் விளைவுகளை தவிர்க்கலாம். நாளை(வெள்ளிக்கிழமை) இரண்டாம் காலாண்டுக்கான முன்கூட்டு வரியான 45 சதவீதத்தை அனைவரும் செலுத்த வேண்டும் என்று பேசினார். முடிவில் வருமானவரித்துறை முதுநிலை எழுத்தர் பாண்டி மீனா நன்றி கூறினார்.


Related Tags :
Next Story