யானை, சிறுத்தை, கரடி எண்ணிக்கை அதிகரிப்பு


யானை, சிறுத்தை, கரடி எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 13 July 2023 6:10 PM GMT (Updated: 14 July 2023 7:12 AM GMT)

ஆம்பூர் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

விழிப்புணர்வு பிரசாரம்

ஆம்பூர் அடுத்த பைரப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் ஆம்பூர் வனச்சரகர் பாபு தலைமையிலான வனத்துறையினர் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது மலையோர கிராம மக்களிடையே வனச்சரகர் பாபு பேசியதாவது:-

காப்புக்காடு பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது. இரவு நேரங்களில் காப்புக்காடு பகுதிகளில் 'டார்ச்லைட்' வெளிச்சத்துடன் மர்ம நபர்கள் சுற்றித்திரிவதாக அவ்வப்போது தகவல்கள் வருகின்றன. எனவே வெளி நபர்கள் நடமாட்டம் காப்புக்காடுகளில் தெரிந்தால் உடனடியாக வனத்துறையினர், காவல் துறையினர் அல்லது கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அதிகரிப்பு

ஆம்பூர் வனச்சரக பகுதிகளில் தற்போது யானைகள், சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளன. கால்நடை மேய்ப்போர், விறகு சேகரிப்போர், கிழங்கு எடுப்போர், தேன் சேகரிப்போர் என யாரும் காப்புக்காடு பகுதிக்குள் இனி போகக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவோர் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். இந்த பகுதிகளில் யாரேனும் உரிமை பெறாத நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்தால் அது குறித்தும் தகவல் தெரிவிக்க வேண்டும். வனப்பகுதியில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்தவர்கள் சாராயம் காய்ச்சுவது அல்லது விற்பனை செய்வது தெரியவந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

தகவல் தெரிவிக்க வேண்டும்

யானைகள் மற்றும் மான்கள் போன்ற வனவிலங்குகள், மக்கள் வசிப்பிடங்கள், வயல்வெளிகள் மற்றும் தோப்பு பகுதிகளுக்கு வந்தால் அதை துரத்தும் முயற்சியில் யாரும் ஈடுபடக்கூடாது. வன விலங்குகளை கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் பேரில் வனத்துறையினர் வந்து வனவிலங்குகளை பாதுகாப்பாக காட்டுக்குள் திருப்பி அனுப்பும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வனவர்கள் முருகன், சுரேஷ்குமார், சம்பத்குமார் வனக்காப்பாளர்கள் மூர்த்தி, ராஜ்குமார், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story