கரடி, காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரிப்பு


கரடி, காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரிப்பு
x

ஊட்டி நகரில் கரடி, காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி நகரில் கரடி, காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

வனவிலங்குகள் உலா

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரை சுற்றி தொட்டபெட்டா, கேர்ன்ஹில், உள்ளிட்ட வனப்பகுதிகளில் காட்டெருமை, கடமான், சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி, ஊட்டி புது அக்ரஹாரம் தெருவில் நள்ளிரவு 12.30 மணிக்கு நடமாடியது. குடியிருப்பில் வீடுகளுக்கு முன் உலா வந்த கரடியை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

இதேபோல் நேற்று முன்தினம் ஊட்டி எச்.பி.எப். பகுதியில் 2 கரடிகள் உலா வந்தன. நள்ளிரவில் அங்குள்ள டீக்கடையில் புகுந்து நடமாடியது. அங்கு 2 கரடிகளும் சிறிது நேரம் ஓய்வெடுத்தது. பின்னர் அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். டீக்கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் 2 கரடிகள் உலா வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது.

வாகன ஓட்டிகள் அச்சம்

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஊட்டி மார்க்கெட் சாலையில் 5 காட்டெருமைகள் உலா வந்தன. இதனால் சாலையில் சென்று வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து சென்றனர். மேலும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் செல்போனில் வீடியோ எடுத்தனர். சமீப நாட்களாக ஊட்டி நகரில் இரவு நேரங்களில் கரடிகள், காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:-

கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதிகளில் விதிமீறல் கட்டிடங்கள் அதிகரிப்பு, வனப்பகுதி ஆக்கிரமிப்பு மற்றும் களைச்செடிகள் அதிகமாகி தீவன பற்றாக்குறை ஏற்படுதல் போன்ற காரணங்களால் வனவிலங்குகள் ஊர்களுக்குள் புகுந்து வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால் மனித-வனவிலங்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவாகள் கூறினர்.

கண்காணிப்பு பணிகள்

இதுகுறித்து நீலகிரி வன கோட்ட அதிகாரி கொம்மு ஓம்காரம் கூறும்போது, ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் கொட்டப்படும் பழ கழிவுகளை உண்ண கரடிகள் வந்து இருக்கலாம். எனவே, பழ கழிவுகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். மேலும் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.


Next Story