தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது
தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தொடர் மழை
நெல்லை மாவட்டத்தில் வழிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காலை நேரத்தில் வெயிலும், பிற்பகலில் மழையும் பெய்து வருகிறது.
நெல்லையில் நேற்றும் காலை நேரத்தில் இதமான வெயில் அடித்தது. மாலை 3 மணி அளவில் லேசான மழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதேபோல் நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. நெல்லையில் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. ஏற்கனவே மோசமாக உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு பயணித்து வருகிறார்கள்.
பாபநாசம் அணை
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது. இந்த நிலையில் அணை பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,83 கன அடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் 1,205 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 112.53 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 76.85 அடியாக உள்ளது. இந்த அணைக்கு நீர்வரத்து 175 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதுதவிர கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 46.25 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 13.25 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.49 அடியாகவும் உள்ளது.
தென்காசி அணைகள்
இதேபோல் கடனா அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 107 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 60 கனஅடி தண்ணீ்ர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. 85 அடி உயரம் கொண்ட இந்த அணை நீர்மட்டம் 76.80 அடியாக உள்ளது.
84 அடி உயரம் கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 80.25 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 43 கன அடியாகவும், வெளியேற்றம் 30 கன அடியாகவும் உள்ளது. 72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 67.49 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 5 கன அடியாகவும், வெளியேற்றம் 5 கன அடியாகவும் உள்ளது. 36 அடி உயரம் கொண்ட குண்டாறு அணை நிரம்பி இருப்பதால் அணைக்கு வருகிற 14 கனஅடி தண்ணீர் அப்படியே மறுகால் பாய்ந்து செல்கிறது. இதேபோல் 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நிரம்பி விட்டதால் அணைக்கு வருகிற 46 கனஅடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.
மழை அளவு
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பாபநாசம் -11
சேர்வலாறு -7
மணிமுத்தாறு- 13
ராமநதி -28
குண்டாறு -3
சங்கரன்கோவில்- 2