டாஸ்மாக் கடையால் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரிப்பு


டாஸ்மாக் கடையால் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 20 April 2023 6:51 PM GMT (Updated: 20 April 2023 7:19 PM GMT)

6 சாலைகள் வந்து இணையும் மூலிமங்கலம் பிரிவில் செயல்படும் டாஸ்மாக் கடையால் ஏற்படும் விபத்துகளால் தொடர்ந்து உயிரிழப்புகள் நடந்து வருகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

கரூர்

6 சாலைகள் இணைகிறது

கரூர் மாவட்டத்தில் அதிகளவில் சாலை விபத்துகள் ஏற்படும் இடங்களில் ஒன்றாக மூலிமங்கலம் பிரிவு உள்ளது. இங்கு மேம்பாலத்தின் 2 சர்வீஸ் சாலைகள், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக செல்லும் சாலை, மூலிமங்கலம் செல்லும் சாலை, அண்ணாநகர் வழியாக செல்லும் சாலை, வடிவேலம்பாளையம் வழியாக செல்லும் சாலை என 6 சாலைகள் இந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகின்றன. இந்த சாலைகள் வழியாக வரும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவிகள் உள்பட பொதுமக்கள் மற்றும் கார், வேன், லாரி போன்ற வாகனங்கள் மூலிமங்கலம் பிரிவில் தேசிய நெடுஞ்சாலையை கடந்துதான் மறுபுறம் செல்ல வேண்டும். இதனால் இரவு, பகல் என்று எந்த நேரமும் அதிக போக்குவரத்து உள்ள இந்த இடத்தில் அதிக சாலை விபத்துக்கள் நடப்பதற்கு முக்கிய காரணம் சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள டாஸ்மாக் கடைதான்.

பலர் உயிரிழப்பு

புகழூர் மற்றும் சுற்றுப்புற கிராம பகுதிகளில் இருந்து தினமும் வயதான கூலித்தொழிலாளர்கள், இளைஞர்கள் உட்பட ஏராளமானவர்கள் இந்த டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வருகின்றனர். பின்னர் இவர்கள் திரும்பி செல்லும்போது போதையில் நான்கு புறங்களிலும் இருந்து வரும் வாகனங்களை சரியாக கவனிக்காமல் இருசக்கர வாகனத்தில் தேசியநெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் வரும் வாகனங்களில் அடிபட்டு பலர் உயிரிழக்கின்றனர்.

அதேபோல் தேசியநெடுஞ்சாலையில் கார், வேன் போன்ற வாகனங்களில் வருபவர்களும் திடீரென்று ரோட்டின் குறுக்கே வருபவர்கள் மீது மோதாமல் இருக்க உடனே பிரேக் போடும்போது வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு பயணிகளும் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென்று சாலையை கடக்க முயன்ற குடிமகன் மேல் மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்ட டேங்கர் லாரியின் பின்புறம் கார் மோதியதில் கரூரை சேர்ந்த ஆடிட்டர் ஒருவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோரிக்கை

மேலும் தேசிய நெடுஞ்சாலையில் வரும் லாரி, வேன் ஓட்டுனர்களும் தங்கள் வாகனங்களை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு அங்குள்ள ஓட்டல்களுக்கு சாப்பிடுவதற்கு சென்று விடுகின்றனர். இதனால் நின்று கொண்டு இருக்கும் லாரி மறைப்பதால் சாலையை கடக்கும் மதுப்பிரியர்களும், தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகளுக்கும் பக்கவாட்டில் வாகனங்கள் வருவது தெரியாமல் அதில் மோதி விபத்து ஏற்பட ஒரு காரணமாக உள்ளது.

அதிக போக்குவரத்து மிகுந்த தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையால் புகழூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல பெண்கள் விதவைகளானதுடன் குழந்தைகள் தந்தையை இழந்ததற்கும், பெற்றோர்கள் தங்கள் மகனை இழந்ததற்கும் இந்த டாஸ்மாக் கடை காரணமாக உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இந்த டாஸ்மாக் கடையை புறநகர் பகுதிக்கு மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story