தூத்துக்குடியில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


தினத்தந்தி 21 Jun 2023 6:45 PM GMT (Updated: 22 Jun 2023 11:09 AM GMT)

தூத்துக்குடியில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே அ.தி.மு.கவினர் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ ஆகியோர் தலைமை தாங்கி பேசினர்.

பொறுப்பு

ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பேசும் போது, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்-அமைச்சர் உள்ளிட்டோர் ஓடி சென்று பார்க்கின்றனர். ரூ.30 ஆயிரம் கோடி ரகசியம் தெரிந்து விடக்கூடாது என்று பார்க்கிறார்கள். செந்தில்பாலாஜி வாய் திறந்து விடக்கூடாது என்று ஆஸ்பத்திரியை மாற்றிவிட்டார்கள். ஊழலுக்காக ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது தி.மு.க. ஆட்சிதான். தமிழகத்தில் ஒரு மோசமான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, யார் தவறு செய்தாலும் தைரியமாக நடவடிக்கை எடுத்தார். அவர் வழியில் எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டுகள் நல்லாட்சி தந்தார். மக்களுக்கு எந்த குறையும் இல்லை. மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். திராவிட மாடல் என்கிறார்கள். திராவிடத்தில் உள்ள அனைத்து மாநிலங்களும் தனித்தனியாக இருக்கின்றன. ஆனால் இங்கு மட்டும் திராவிடம் என்று கூறிக் கொண்டு இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும், எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கை ஓங்க வேண்டும். அதற்கான பொறுப்பு உங்களிடம் உள்ளது என்று கூறினார்.

மூடுவிழா

ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ பேசும் போது, தமிழகத்தில் பொய்யான வாக்குறுதிகளை கூறி தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டது. தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 தருவதாக கூறினார்கள். இதுவரை 26 மாதங்கள் ஆகிவிட்டன. இதனால் முதல்-அமைச்சர் ஒவ்வொரு தாய்மாருக்கும் ரூ.26 ஆயிரம் கடன்பட்டு இருக்கிறார். வருகிற எம்.பி. தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெறும். தூத்துக்குடி மாவட்டத்துக்கு அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்மார்ட்சிட்டி திட்டம், விமான நிலைய விரிவாக்க திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, சிறந்த எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார். தாலிக்கு தங்கம் திட்டம், இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், மினிகிளினிக் நிறுத்தப்பட்டு விட்டது. நீங்கள் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தினால் எங்களுக்கு கோட்டையில் திறப்பு விழா நடக்கும். எடப்பாடி பழனிசாமி சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு அனைவராலும் விரும்பும் தலைவராக உள்ளார். பசுமையான இரட்டை இலை துளிர்க்கும் போது மக்களுக்கு விடியல் கிடைக்கும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழச்சியில் அ.தி.மு.க.அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, ஒன்றியச் செயலாளர்கள் காசிராஜன், விஜயகுமார், முன்னாள் அரசு வக்கீல்கள் சுகந்தன் ஆதித்தன், ஜோதிடர் ரமேஷ் கிருஷ்ணன், திருச்செந்தூர் முன்னாள் ஒன்றிய பொருளாளர் பழக்கடை திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

துண்டுபிரசுரம் வினியோகம்

இதேபோன்று, தமிழக அமைச்சரவையில் மின்சார துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்து உள்ளது. இதே போன்று தலைமை செயலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சம்பவங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலைப்பாடு குறித்து விளக்கியும், முதல்-அமைச்சருக்கு எதிராகவும் துண்டு பிரசுரம் வினியோகிக்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தூத்துக்குடி-பாளையங்கோட்டை ரோட்டில் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தார். தொடர்ந்து தமிழ்ச்சாலை, வ.உ.சி சாலை முழுவதும் வீதி, வீதியாக சென்று துண்டு பிரசுரங்களை வினியோகித்தார்.

இந்தநிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலாளர் என்.சின்னதுரை, முன்னாள் அரசு வக்கீல் சுகந்தன் ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story