திருவாரூரில், பருத்தி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்


திருவாரூரில், பருத்தி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்
x

திருவாரூரில், பருத்தி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் 90 சதவீத அறுவடை பணிகள் நிறைவடைந்த நிலையில் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பருத்தி சாகுபடி

பணப்பயிர்களில் முக்கிய இடம் பிடிக்கும் பருத்தி, இந்தியப்பொருளாதாரம் மற்றும் தொழில் துறையில் ஆதிக்கம் செலுத்த கூடியதாக உள்ளது. ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய இடம் பிடிக்கும் ஜவுளித்துறையின் முக்கிய மூலப்பொருளாக பருத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நெல்சாகுபடிக்கு அடுத்தபடியாக பருத்தி சாகுபடியை விவசாயிகள் நம்பியுள்ளனர். பருத்தி சாகுபடியானது திருவாரூர் மாவட்டத்தில் சம்பா- தாளடி அறுவடைக்கு பின்னர் பருத்தியை ஜனவரி, பிப்ரவரி (தை, மாசி பட்டங்களில்) மாதங்களில் பயிரிடுவார்கள்.

தற்போது 90 சதவீதம் அறுவடை பணிகள் முடிந்து விட்டன. தண்ணீரில் மூழ்கி கிடந்த நெற்பயிர்களும் அறுவடை செய்யப்பட்டன.

இந்தநிலையில் ஆழ்குழாய் வசதியுடைய விவசாயிகள் அடுத்தகட்ட சாகுபடி பணிக்கு திரும்பி உள்ளனர். அதாவது வயலில் அறுவடை பின்னர் கிடைக்கும் வைக்கோலை கட்டுகளாக கட்டி விற்பனைக்கு சிலர் அனுப்பிவிடுகின்றனர். சிலர் அந்த வைக்கோலை தீயிட்டு கொழுத்தி வயலில் உரமாக்கிவிடுகின்றனர். பின்னர் பணப்பயிரான பருத்தியை சாகுபடி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

உரிய மகசூல் கிடைக்கும்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மழைக்கு முன்னதாக சில விவசாயிகள் நாங்கள் அறுவடை செய்து, பருத்திக்கான விதை விதைத்து விட்டோம். அவற்றை மழை பெய்து நாசமாக்கிவிட்டது. அதனை தொடர்ந்து வயலில் தண்ணீர் வடிந்த பின்னர் மீண்டும் பருத்தி விதைத்துள்ளோம். சரியான நேரத்திற்கு விதைத்தால் உரிய மகசூல் பெறலாம்.

தற்போது விதைத்துள்ள பருத்தி எப்படி மகசூல் தரபோகிறதோ?. மேலும் மழைக்கு பின்னால் அறுவடை செய்த விவசாயிகள் தற்போது பருத்தி சாகுபடியை தொடங்கியுள்ளதால் உரிய மகசூல் கிடைக்கும் என்றார்.

பாய்நாற்றங்கால் தயாரிக்கும் பணி

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், தற்போது 90 சதவீதம் நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து ஆழ்குழாய் வசதி உள்ள விவசாயிகள் பருத்தி சாகுபடியை தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு சுமார் 15 ஆயிரம் எக்டேர் வரை பருத்தி சாகுபடி செய்ய வாய்ப்பு உள்ளது. கோடை நெல் சாகுபடி நாற்றங்கால் விடும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. கோடை நெல் சாகுபடியை பொருத்த வரை சுமார் 10 ஆயிரம் எக்டேருக்கான பாய்நாற்றங்கால் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.


Next Story