மாவட்டத்தில்20 இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி
மாவட்டத்தில் 20 இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
வனத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தேனி மாவட்ட வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நேற்று நடந்தது. நீர்நிலைகள் மற்றும் நீர்நிலைகள் சார்ந்த இடங்களில் வாழும் பறவைகள் குறித்து இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூர், கூடலூர், மயிலாடும்பாறை ஆகிய வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 20 நீர்நிலைகளில் இந்த கணக்கெடுப்பு பணி நடந்தது.
ஒவ்வொரு இடத்திற்கும் வனத்துறை அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருந்தது. தேனி மீறுசமுத்திரம் கண்மாய், பூதிப்புரம் ராஜபூபால சமுத்திரம் கண்மாய் ஆகிய இடங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகளை மாவட்ட வன அலுவலர் சமர்த்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வனச்சரகர் அருள்குமார், வனவர் அன்பரசன் ஆகியோர் உடனிருந்தனர்.
கணக்கெடுப்பு பணிகள் நடந்த 20 இடங்களிலும் தேனி மாவட்ட தன்னார்வலர் குழு உள்பட பல்வேறு தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள் பங்கேற்றனர். இந்த கணக்கெடுப்பு விவரங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு அந்த பட்டியல் ஈர நில ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக வனப்பகுதிகளில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி மார்ச் மாதத்தில் நடத்தப்பட உள்ளது.