2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் புதிய கூட்டணி; முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி பேட்டி


2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் புதிய கூட்டணி; முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி பேட்டி
x

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்று முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி கூறினார்.

திருச்சி

ஆலோசனை கூட்டம்

பா.ம.க. தென் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், நேற்று திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் பிரின்ஸ் வரவேற்றார். மத்திய மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் திலிப்குமார், புறநகர் மாவட்ட செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய இணை மந்திரியும், கட்சியின் வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளருமான ஏ.கே.மூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், திருச்சி மாவட்டம் முழுவதும் மாணவர்கள் மத்தியில் உலா வரும் கஞ்சா, போதை ஊசிகள் விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் சட்ட விரோத லாட்டரி சீட்டு விற்பனை, காவிரி கரையில் மணல் திருட்டு ஆகியவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மணப்பாறையில் காய்கறி மார்க்கெட்டை சரி செய்ய வேண்டும். துவாக்குடி சர்வீஸ் சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய கூட்டணி

பின்னர் முன்னாள் மத்திய இணை மந்திரி ஏ.கே.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது;- வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து கட்சியின் நிறுவனத் தலைவர் மற்றும் தலைவர் முடிவு செய்வார்கள். தற்போது வரை பா.ஜ.க.விற்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறோம்.

வருகின்ற 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் புதிய கூட்டணி அமைத்து தென் மாவட்டங்களில் அதிக தொகுதிகளில் பா.ம.க. வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட உள்ளோம். டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா, மாவட்ட தலைவர்கள் சரவணன், செலஸ்டின் செல்வகுமார், வக்கீல் சக்திவேலன், தாமோதரன், தென் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஜங்ஷன் பகுதி செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.


Next Story