நாகூரில், கரும்பு சாறு விற்பனை மும்முரம்
நாகூரில் வெயில் சுட்டெரிப்பதால் கரும்பு சாறு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாகூர்:
நாகூரில் வெயில் சுட்டெரிப்பதால் கரும்பு சாறு விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சுட்டெரிக்கும் வெயில்
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. கத்ரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில் வெயில் வாட்டி வருகிறது. பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் தாக்கம் இரவிலும் காணப்படுகிறது. இரவில் மின்விசிறி இல்லாமல் தூக்க முடியாத நிலையில் உள்ளது.
இந்தவெயில் கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக பொதுமக்கள் மோர், சர்பத், இளநீர், தர்பூசணி, கரும்பு சாறு உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களை நாடி செல்கின்றனர். இதனால் கரும்பு சாறு, சர்பத், இளநீர் உள்ளிட்டவை விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கரும்பு சாறு விற்பனை மும்முரம்
நாகூர்-நாகை சாலையில் எங்கு பார்த்தாலும் சாலையோரங்களில் கரும்பு சாறு, தர்பூசணி விற்பனை நடந்து வருகிறது.பகலில் கடும் வெயிலில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் விற்பனை செய்யப்படும் கரும்பு சாறு, இளநீர், சர்பத் ஆகியவற்றை வாங்கி குடித்து செல்கின்றனர்.
இதுகுறித்து வடமாநில கரும்பு சாறு வியாபாரி கூறுகையில்:
நாங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்து தமிழ்நாட்டில் வேலை பார்த்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் அந்த பகுதிக்கு வந்து கரும்பு சாறு விற்பனை செய்கிறோம்.
ஒரு கப் ரூ.20-க்கு விற்பனை
கரும்புகளை தஞ்சை பகுதியில் உள்ள விவசாயிகளிடம் வாங்கி சாலையோரங்களில் கடை அமைத்து கரும்பு சாறு விற்பனை செய்து வருகிறோம். தற்போது வெயில் சுட்டெரிப்பதால் கரும்பு சாறை பலர் விரும்பி குடிக்கின்றனர். இந்த ஆண்டு கரும்பு விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு 2 டன் கரும்பு ரூ.10 ஆயிரத்துக்கு வாங்கினோம்.
ஆனால் இந்த ஆண்டு 2 டன் கரும்பு ரூ.12 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கப் கரும்பு சாறு ரூ.20-க்கு விற்பனை செய்து வருகிறோம். ஒரு நாளைக்கு அதிக அளவில் கரும்பு சாறு விற்பனை செய்தால்தான் ஆள் கூலி போக லாபம் கிடைக்கும் என்றார்.