மன்னார்குடியில், விவசாயிகள் சாலைமறியல்


மன்னார்குடியில், விவசாயிகள் சாலைமறியல்
x

மன்னார்குடியில், விவசாயிகள் சாலைமறியல்

திருவாரூர்

பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்கக்கோரி மன்னார்குடியில், விவசாயிகள் கரும்புகளை கையில் ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கரும்பு விவசாயம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டை, மேல நாகை, மேலவாசல், சாரிக்கோட்டை மற்றும் தஞ்சை, திருவாரூர் மாவட்ட எல்லை பகுதிகளான பேரையூர், கருவாக்குறிச்சி, காஞ்சி குடிக்காடு உள்ளிட்ட கிராமங்களில் பொங்கல் பண்டிகைக்காக விவசாயிகள் கரும்பு பயிரிடுவது வழக்கம்.

கடந்த ஆண்டுகளில் அரசு பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முழு கரும்பு ஒன்றும் வழங்கியது. இதனால் கரும்பு பயிரிடும் பரப்பு அந்த பகுதியில் அதிகரித்தது. மேலும் கரும்பு விவசாயிகளுக்கு வருமானமும் அதிகரித்தது.

அறிவிப்பு இல்லை

இதனால் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல்லுக்கு மாற்று பயிராக பொங்கல் கரும்பை பயிரிட்டனர்.

ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக சர்க்கரை, பச்சரிசி மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. ஆனால் கரும்பு பற்றிய எந்த அறிவிப்பும் இல்ைல. இதனால் தமிழகம் முழுவதும் கரும்பு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சாலை மறியல்

இதனால் பொங்கல் பரிசாக கரும்பையும் சேர்ப்பது குறித்து மறு பரிசீலனை செய்து பொங்கல் கரும்பை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி மன்னார்குடி காளவாய்கரை பகுதியில் கரும்பு விவசாயிகள் கரும்புகளை கையில் ஏந்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் அண்டோ, கரும்பு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து விவசாயிகள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலைமறியல் போராட்டத்தால் மன்னார்குடி-தஞ்சை, மன்னார்குடி-வடசேரி வழித்தடத்தில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story