தேனியில் மத்திய அரசுக்கு எதிராக வக்கீல் சகோதரிகள் பிரசாரம்


தேனியில்  மத்திய அரசுக்கு எதிராக வக்கீல் சகோதரிகள் பிரசாரம்
x

தேனியில் மத்திய அரசுக்கு எதிராக வக்கீல் சகோதரிகள் பிரசாரம் செய்தனர். பா.ஜ.க. வினரும் எதிர்ப்பு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி

மத்திய அரசுக்கு எதிராக பிரசாரம்

மதுரை கோ.புதூரை சேர்ந்த வக்கீல் சகோதரிகள் நந்தினி மற்றும் நிரஞ்சனா. இவர்கள் இருவரும் தேனி பழைய பஸ் நிலையத்துக்கு இன்று வந்தனர். அப்போது அவர்கள், மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.10.72 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ள நிலையில் அதனை வசூல் செய்து வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை தர வேண்டும் என்ற பிரசார இயக்கத்தின் சார்பில் துண்டு பிரசுரம் வினியோகித்தனர்.

அப்போது அனுமதியின்றி துண்டு பிரசுரம் வினியோகம் செய்வதாக கூறி தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர். அப்போது திடீரென பா.ஜ.க. நகர தலைவர் மதிவாணன், துணைத் தலைவர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் கட்சிக் கொடிகளுடன் அங்கு திரண்டு வந்தனர்.

பா.ஜ.க.வினர் கோஷம்

துண்டு பிரசுரம் வினியோகம் செய்த சகோதரிகள் இருவரையும் அவர்கள் சூழ்ந்து கொண்டு அவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. இதையடுத்து நந்தினி, நிரஞ்சனா இருவரையும் போலீசார் வேனில் ஏற்றி தேனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் போலீஸ் நிலையத்துக்கு பா.ஜ.க.வினர் வந்தனர். மோடிக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்வதால் அவர்களை கைது செய்யக்கோரி பா.ஜ.க.வினர் புகார் கொடுத்தனர். பின்னர் பா.ஜ.க.வினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதையடுத்து நந்தினி, நிரஞ்சனா ஆகிய இருவரிடமும் போலீசார் எழுதி வாங்கிவிட்டு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story