தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு  மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

தேனியில் மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்ட பா.ஜ.க. சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பா.ஜ.க.வினர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

பின்னர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

போலீசாருடன் வாக்குவாதம்

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் எதிரே சாலையோரம் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஆர்ப்பாட்டத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்தை சாலையின் மற்றொரு பகுதி வழியாக திருப்பி விடுமாறு சிலர் போலீசாரிடம் வலியுறுத்தினர். ஆனால் போலீசார் போக்குவரத்தை திருப்பி விட மறுத்ததோடு சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி ஆர்ப்பாட்டம் செய்யுமாறு கூறினர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினர் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து சிறிது நேரம் போக்குவரத்து மாற்றப்பட்டது. பின்னர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சிக்கவிதாசன், பொதுச்செயலாளர்கள் மாரிச்செல்வம், பாலு, முன்னாள் மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன், நகர தலைவர் மதிவாணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story