ஈரோடு மாவட்டத்தில்3 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இணை இயக்குனர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இணை இயக்குனர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.
கோமாரி நோய் தடுப்பூசி
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை கால்நடைகளுக்கு, 3-வது சுற்றாக கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.
இதுபற்றி கால்நடை பராமரிப்பு துறை ஈரோடு மண்டல இணை இயக்குனர் பழனிவேல் கூறியதாவது:-
விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு சவாலாக கோமாரி நோய் அமைகிறது. இந்நோயால் கறவை மாட்டில் பால் உற்பத்தி குறையும். சினை பிடிப்பு தடைபடும். கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க, 6 மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு 2 முறை இலவசமாக அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
3 லட்சம்
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 34 ஆயிரத்து 750 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த மருந்துகள் பெறப்பட்டுள்ளன. கால்நடை உதவி டாக்டர்கள் தலைமையில் 96 குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தினோம். இதுவரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 50 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி முடித்துள்ளோம். அதாவது 90 சதவீத மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
மீதமுள்ள 30 ஆயிரத்து 700 கால்நடைகளுக்கு வருகிற 31-ந்தேதி வரை தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளோம்.
எனவே கால்நடை வளர்ப்போர் தவறாமல், அந்தந்த பகுதியில் உள்ள கால்நடை மருந்தகம், மருத்துவமனைக்கு தங்களது கால்நடைகளை அழைத்து சென்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.