அவமதிப்பு வழக்கில்தலைமை செயலாளர் நேரில் ஆஜராக விலக்கு- ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்ற எடுத்த நடவடிக்கைக்கும் நீதிபதி பாராட்டு


அவமதிப்பு வழக்கில்தலைமை செயலாளர் நேரில் ஆஜராக விலக்கு- ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்ற எடுத்த நடவடிக்கைக்கும் நீதிபதி பாராட்டு
x

ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்ற வலியுறுத்தி தலைமை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கைக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்ததுடன், அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் உத்தரவிட்டார்.

மதுரை


ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்ற வலியுறுத்தி தலைமை செயலாளர் அனுப்பிய சுற்றறிக்கைக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்ததுடன், அவர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்தும் உத்தரவிட்டார்.

கோர்ட்டு அவமதிப்பு

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பதவி உயர்வு பண பலன்களை முறையாக வழங்காத அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை தொடர்பான வழக்கு ஒன்றில், மனுதாரருக்கு நிவாரணம் வழங்க மதுரை ஐகோர்ட்டு கடந்த 2020-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் தற்போது வரை கோர்ட்டு உத்தரவு நிறைவேற்றப்படாததால், அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்தார்.

ஆஜராக உத்தரவு

இந்த வழக்கு கடந்த மாதம் நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்த போது, எதிர்மனுதாரர் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தும், கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தற்போது வரை பதில் மனு தாக்கல் செய்யவோ, தனது தரப்பு விளக்கத்தையோ அளிக்கவில்லை. அதாவது, கோர்ட்டு உத்தரவுக்கு எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பது தெளிவாக தெரிகிறது.

எனவே, தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவதாஸ்மீனா (அப்போதைய நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர்) மதுரை ஐகோர்ட்டு கிளையில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

பாராட்டு

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அறிக்கையில், தமிழக அரசின் அனைத்து துறை செயலாளர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் கோர்ட்டு உத்தரவுகளை உடனடியாக நிறைவேற்ற சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தால், அதில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தால் அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், வழக்கில் மேல்முறையீடு செய்வதாக இருந்தால் உடனடியாக அரசு வக்கீலை அணுகி சட்ட ஆலோசனை பெற்று உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். மேல்முறையீடு செய்ய முடியாத வழக்குகளில் கோர்ட்டு உத்தரவுகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சுற்றறிக்கையின் நகலும் அரசு கூடுதல் தலைமை வக்கீல் மூலம் நீதிபதி முன்பு தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன், தலைமை செயலாளர் நேரில் ஆஜராக விலக்கு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தலைமை செயலாளரின் சுற்றறிக்கைக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமை செயலாளர் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கும் அளித்து உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.


Next Story