கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில்மனிதர்களை பயன்படுத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை மேட்டூர் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை
மேட்டூர்
மேட்டூர் நகராட்சி ஆணையாளர் நித்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேட்டூர் நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணிக்கு நகராட்சி சொந்தமான வாகனம் அல்லது நகராட்சி மூலம் உரிமம் பெற்ற வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதற்காக 14420 என்ற கட்டணம் இல்லாத எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனிதர்களை பயன்படுத்தினால் அவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். அதிகபட்சமாக 5 ஆண்டு சிறை தண்டனை அல்லது 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். கழிவுநீர் சுத்தம் செய்யும் பணியில் மனிதர்கள் ஈடுபடும் பொழுது உயிரிழப்பு ஏற்பட்டால் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய நகராட்சி வாகனம் அல்லது உரிமை பெற்ற வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.